» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சபரிமலையில் மகரவிளக்கு பூஜை நாளை நிறைவு; மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி!
சனி 18, ஜனவரி 2025 10:44:15 AM (IST)
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை நாளை (19ம் தேதி) நிறைவு பெற உள்ள நிலையில், மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட்டு டிசம்பர் 27ம் தேதி நடை சாத்தப்பட்டது. தொடர்ந்து டிசம்பர் 30ம் தேதி மீண்டும் நடை திறக்கபப்பட்டு மகரவிளக்கு பூஜை நடந்து வந்தது. மகரவிளக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் கடந்த ஜனவரி 14ம் தேதி மாலை நடைபெற்றது.
இந்நிலையில், நடப்பாண்டுக்கான மகரவிளக்கு பூஜை நாளை (19ம் தேதி) நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை மாலை 6 மணி வரை மட்டுமே பம்பையில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். தொடர்ந்து இரவு 10 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வரும் 20ம் தேதி பந்தளம் ராஜ குடும்பத்தினர் அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்கின்றனர். பின்னர் மாலை 6.30 மணிக்கு பூஜை நடத்தப்பட்டு நடை சாத்தப்படுகிறது. அத்துடன் நடப்பாண்டுக்கான மகரவிளக்கு பூஜை வழிபாட்டு காலம் நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது.