» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வானில் ஒரே நேர்க்கோட்டில் ஏழு கோள்களின் அணிவகுப்பு! ஜன. 21-ல் அதிசய நிகழ்வு!
சனி 18, ஜனவரி 2025 5:54:58 PM (IST)
வானில் ஏழு கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து வரும் அதிசயம் வரும் 21ஆம் தேதி நிகழவிருக்கிறது. அவற்றை நம்மால் காண முடியும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன், யுரேனஸ் மற்றும் புதன் ஆகிய கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து நிற்கும் அதிசய நிகழ்வானது ஜனவரி 21 ஆம் தேதி நிகழவிருக்கிறது. இது குறிப்பிடத்தக்க நிகழ்வாக இருப்பதற்குக் காரணம், இந்த கோள்கள் அனைத்தும் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருப்பது மட்டுமல்ல, அந்தக் கோள்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தொலைவுகளில் சுற்றிக்கொண்டிருப்பதும்தான்.
இவ்வாறு ஏழு கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து நின்று, இரவு நேரத்தில் வானத்தில் ஓர் அழகிய அரை வட்டத்தை உருவாக்கிக் காண்பவர்களின் நினைவில் நீங்கா ஒரு அனுபவமாக இடம்பிடிக்கவிருக்கிறது. இவை எல்லாம் ஒரே நாளில் நடக்கப்போவதில்லை.
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் தேதி முதல் நிலவுக்கு மிக அருகே வெள்ளிக் கோளானது நிலைகொண்டிருக்கிறது. அதன் பிறகு, ஜனவரி 13 ஆம் தேதி பௌர்ணமி நாளிலிருந்து செவ்வாய் கோளானது நெருங்கி வந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில்தான், வெள்ளியும், சனிக் கோளும் இதுவரை இல்லாத வகையில் நெருக்கமாக வந்துகொண்டிருக்கின்றன. இவை ஜனவரி 18 ஆம் தேதி முதல் மிக அருகருகே நேர்க்கோட்டில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று, ஜன. 18 முதல், மாலை வேளைகளில், இவ்விரண்டு கோள்களும் ஒரே நேரத்தில் மக்களுக்குக் காட்சியளிக்கத் தொடங்கும்.
சூரியன் மறைந்து, முழுவதும் இருள் சூழ்ந்த பிறகு உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணி முதல் பார்க்கலாம். ஆனால், வெள்ளி, சனி மற்றும் நெப்ட்யூன் கோள்கள் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவதற்கு இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு ஆகலாம். அது அவரவர் இருக்கும் இடத்தைப் பொருத்தது. அதன் பிறகு மேலும் சில மணி நேரங்களில் செவ்வாய், வியாழன், யுரேனஸ் கோள்களும் இவற்றுடன் அணிவகுக்கும். சூரிய உதயத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்பு செவ்வாய் மறைந்துவிடும்.
பொதுவாகவே, ஒன்றிரண்டு கோள்கள் ஒன்றாக நெருங்கி வரும். அதனை வானில் அவ்வப்போது காணலாம். ஆனால், ஒன்றல்ல இரண்டல்ல ஏழு கோள்கள் ஒன்றாக அணிவகுத்து வருவதும், இரவு நேரத்தில் பார்க்க முடிவதும் வழக்கமான ஒன்றல்ல. அபூர்வம்தான். அதுவும், கோடு போட்டதுபோல, ஒரே நேர்க்கோட்டில் ஏழு கோள்களும் ஒன்றாக அணிவகுப்பதும் அதிசயமே அசந்துபோகும் நிகழ்வு.
சூரியனைக் கோள்கள் சுற்றி வரும் பாதையானது, வானத்தின் குறுக்கே இருப்பதாக ஒரு கற்பனைக் கோடு. இந்தப் பாதையை 'கிரகணம்' என்று அழைக்கிறார்கள். சூரியனைச் சுற்றிக் கொண்டிருந்த வாயு மற்றும் தூசுகள் சேர்ந்து தட்டையாக உருவானதுதான் நமது பூமி மற்றும் இதர சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த கோள்கள். அதனால்தான் அவை சூரியனை ஒரே பாதையில் சுற்றிக்கொண்டிருப்பதாகவும் நம்பப்படுகிறது.
எப்போதெல்லாம், வானில், இந்த கோள்களில் ஒன்றிரண்டு தென்படுகிறதோ, அவை இந்த சுற்றுப்பாதையில் பயணிக்கும்போதுதான் வானில் தெரிகிறது. இந்தப் பாதையை வைத்துத்தான், வானில் தெரிவது நட்சத்திரமா, கோள்களா என்று கண்டறிகிறார்கள். இந்த நிலையில், சூரியனைச் சுற்றிவரும் பாதையில் ஒரே இடத்தில் கோள்கள் அணிவகுப்பது மட்டும் எவ்வாறு தனித்துவமான நிகழ்வாக மாறியிருக்கிறது. அதாவது, நாம் செவ்வாய்க் கோளை பார்க்கப் போகிறோம் என்றால், நமக்குப் பின்னால் சூரியன் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
J.kaniahJan 21, 2025 - 07:38:43 PM | Posted IP 172.7*****