» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கூடைப்பந்து வீராங்கனை விஷம் குடித்து தற்கொலை: போட்டியில் தோல்வி அடைந்ததால் பரிதாபம்!
வியாழன் 14, நவம்பர் 2024 7:58:22 PM (IST)
சங்கரன்கோவில் அருகே போட்டியில் தோல்வி அடைந்ததால் கூடைப்பந்து வீராங்கனை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. முன்னாள் ராணுவ வீரர். இவரது மகள் ரோஸ்லின் (21). இவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கூடைப்பந்து போட்டியில் சிறந்து விளங்கியதால் கல்லூரி அணியில் இடம் பிடித்து இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் ரோஸ்லின் தனது அணியோடு பங்கேற்றார். ஆனால் அவர் விளையாடிய அணி தோல்வி அடைந்ததால் அனைவரும் திரும்பி வந்தனர். அவரும் சொந்த ஊருக்கு திரும்பி வந்தார்.
போட்டியில் தோல்வி அடைந்ததால் ரோஸ்லின் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவில் வீட்டில் பூச்செடிகளுக்கு அடிக்க பயன்படும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கினார்.
இதை அறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவேங்கடத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரோஸ்லின் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சங்கரன்கோவில் அருகே போட்டியில் தோல்வி அடைந்ததால் கூடைப்பந்து வீராங்கனை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.