» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் ஆய்வு!

புதன் 13, நவம்பர் 2024 4:32:13 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் ஆய்வு செய்தார். 

திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட கொக்கிரகுளம் ஹோட்டல் தமிழ்நாடு, டவுண் நயினார் குளம், சேரன்மகாதேவி வட்டம் பிராஞ்சேரி குளம் மற்றும் மணிமுத்தாறு அணைப் பகுதிகளில் இன்று (13.11.2024) சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட கொக்கிரகுளம் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் தமிழ்நாடிலுள்ள தங்கும் அறை, சமையல் கூடம், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் ஆய்வு செய்ததோடு, காலை உணவு உட்கொண்டிருந்த வாடிக்கையாளர்களிடம் உணவின் சுவை, தரம் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

தொடர்ந்து, திருநெல்வேலி மாநகராட்சி டவுண் பகுதியில் அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவிலுக்கு அருகில் உள்ளது நயினார் குளம். இக்குளத்தின் ஆழம் 2.78 மீட்டர்(அ) 9.30 அடி, மொத்த பரப்பளவு 129.48 ஏக்கர் ஆகும். தற்போது திருநெல்வேலி மாநகராட்சியின் சீர்மிகு நகர திட்டத்தின் மூலம் கரைப்பகுதிகள் முழுவதும் தடுப்புச்சுவர், சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகள் விளையாடுவதற்கான பூங்கா, குளத்தினை சுற்றி நடைப்பாதை, கண்காணிப்பு கேமரா, உணவு அருந்துவதற்கான இடம், கழிப்பறை வசதி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மேலும், இக்குளத்தில் படகு விடுதல், படகு சவாரி, நீர் விளையாட்டு போட்டிகள் போன்ற விளையாட்டு போட்டிகளுடன் பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் பிரதான சாலையில் பத்தமடை அருகில் உள்ள பிராஞ்சேரி குளம் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) கட்டுப்பாட்டில் உள்ளது. இக்குளத்தில் தனியார் பங்களிப்புடன் படகு சவாரி ஏற்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, மணிமுத்தாறு அணை பகுதியில் 2023-2024 ஆம் ஆண்டு சுற்றுலாத்துறை அறிவிப்பின்படி மணிமுத்தாறு அணை பூங்கா பகுதியில் சாகச சுற்றுலா வசதிகள் பல்லுயிர் பூங்கா போன்ற பல்வேறு வசதிகளுடன் அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்தி, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுச்சூழல் சுற்றுலா தலமாக மாற்ற முதற்கட்டமாக ரூ.5 கோடி செலவில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், மணிமுத்தாறு அணையில் படகு சவாரி தொடங்குவது குறித்தும், மணிமுத்தாறு அணைப்பகுதியிலுள்ள பூங்காவில் தேவையான கூடுதல் வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் கள ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் என்.ஓ.சுகபுத்ரா, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் (அம்பாசமுத்திரம் வனக்கோட்டம்) இளையராஜா, துணை மேயர் கே.ஆர்.ராஜீ, முன்னாள் சட்டமன்ற பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா, அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பரணிசேகர், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணைத் தலைவர் இசக்கிபாண்டி, சுற்றுலா வளர்ச்சிக் கழக உதவி மேலாண்மை மேலாளர் டேவிட் பிரபாகரன், சுற்றுலாத்துறை உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன், அரசு அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory