» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: சபாநாயகர், அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு!
திங்கள் 23, டிசம்பர் 2024 5:16:30 PM (IST)
மணிமுத்தாறு அணை மற்றும் வடக்கு பச்சையாறு அணை நீர்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக பேரவைத் தலைவர் மு.அப்பாவு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் தண்ணீர் திறந்து வைத்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணை மற்றும் வடக்கு பச்சையாறு அணை நீர்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர், மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராபர்ட் புரூஸ், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி.ஆர்.மனோகரன், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோர் முன்னிலையில் தண்ணீர் இன்று (23.12.2024) திறந்து வைத்தனர்.
மணிமுத்தாறு நீர்தேக்கத்தின் சாதகமான நீர்நிலையை கருத்தில்கொண்டு நடப்பாண்டிற்கான (2024- 2025) முன்னுரிமை பகுதியான 3- வது மற்றும் 4 வது ரீச்சுகளை சார்ந்த 12018 ஏக்கர் மறைமுக பாசனப்பரப்புகளுக்கு 23.12.2024 முதல் 31.03.2025 முடிய 99 நாட்கள் நீர் இருப்பு மற்றும் வரத்தை பொறுத்து மணிமுத்தாறு பிரதான கால்வாயில் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிடப்படும். மணிமுத்தாறு பிரதானக்கால்வாய் 3 வது மற்றும் 4 வது ரீச்சுகளுக்கு தண்ணீர் திறப்பதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி, திசையன்விளை தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், ஏரல், திருவைகுண்டம் ஆகிய வட்டங்களை சார்ந்த 40 கிராமங்கள் பயன்பெறும்
மணிமுத்தாறு நீர்தேக்கத்தின் இருந்து திறக்கப்படும் தண்ணிரானது சுமார் 46 கி.மீ பயணித்து 3- வது மற்றும் 4 வது ரீச் தலைமதகை வந்தடைகிறது. இதன் மூலம் மணிமுத்தாறு 3- வது ரீச்சில் 97 குளங்களும் மற்றும் 4-வது ரீச்சில் 79 குளங்களும் பயன்பெறும்
தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம் வடக்கு பச்சையாறு நீர்தேக்கத்தின் பாசன பரப்பு ஆயக்கட்டான மடத்துக்கால், நான்குநேரியன் கால்வாய் மற்றும் பச்சையாற்றின் குறுக்கே அமைந்துள்ள முதல் ஐந்து அணைக்கட்டுகள் ஆகியவற்றின் மூலம் பாசனம் பெறும் 9592.91 ஏக்கர் நிலங்களுக்கும், பழைய ஆயக்கட்டுகளுக்கு (4711.83 ஏக்கர்) ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தேவையின் அடிப்படையில் வழங்குவதற்கும் 23.12.2024 முதல் 31.03.2025 முடிய, நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 100 கன அடிக்கு மிகாமல் பிசான சாகுபடிக்கு நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி மணிமுத்தாறு அணை மற்றும் வடக்கு பச்சையாறு அணை ஆகிய நீர்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அணையில் இருந்து 440 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, திசையன்விளை மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், ஏரல், திருவைகுண்டம் ஆகிய பகுதிகளில் 12018 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும். இன்று முதல் 31.03.2025 முதல் 99 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து மணிமுத்தாறு பிரதான கால்வாயில் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்படும்.
அதேப்போன்று நாங்குநேரி வட்டம், வடக்கு பச்சையா நீர்தேக்கத்திலிருந்து 23.12.2024 முதல் 31.03.2025 முடிய, நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 100 கன அடிக்கு மிகாமல் பிசான சாகுபடிக்கு நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்படும் இந்த நீர்தேக்கத்தின் மூலம் பத்தை, மஞ்சுவிளை, களக்காடு, பத்மநேரி, வடமலைசமுத்திரம், சூரன்குடி, கடம்போடு வாழ்வு, நாங்குநேரி, கரந்தாநேரி, மறுகால்குறிச்சி, பட்டர்புரம், இறைப்புவாரி, பரப்பாடி ஆகிய கிராமங்கள் பயன்பெறும் எனவே விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தவும் நீர் வினியோக பணியில் நீர்வளத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கேரள மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக இருமாநில அரசுகளும் பேசியதைத் தொடர்ந்து கேரள அரசு கொட்டிய கழிவுகளை அப்புறப்படுத்தி அள்ளிச் செல்கிறது. வரலாற்றில் இதுவரை இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை, இனி இதுபோன்ற சம்பவம் நடக்காது. இச்செயல்களில் ஈடுபடுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மணிமுத்தாறு பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாஞ்சோலை பகுதியை சேர்ந்த 12 நபர்களுக்கு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு திட்டத்தின் கீழ் கல்லிடைகுறிச்சி தெற்கு பாப்பான்குளம் பகுதியில் 3 நபர்களுக்கும், ரெட்டியார்பட்டி பகுதியில் 9 நபர்களுக்கும் என மொத்தம் 12 நபர்களுக்கு குடியிருப்பதற்கான ஆணைகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார், களக்காடு நகர்மன்ற தலைவர் சாந்தி சுபாஷ், களக்காடு நகர்மன்ற துணைத்தலைவர் பிசி.ராஜன், கல்லிடைகுறிச்சி பேரூராட்சி துணைத் தலைவர் இசக்கிபாண்டி, நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத் தலைவர் சௌமியா ஆரோக்கிய எட்வின், செயற்பொறியாளர்கள் தனலெட்சுமி (மணிமுத்தாறு), வசந்தி (வடக்கு பச்சையாறு) உதவி செயற்பொறியாளர்கள் ஆவுடையப்பன், தங்கராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் உள்ளனர்.