» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குழந்தை திருமணங்கள் 50 சதவீகிதம் குறைந்துள்ளது : ஆட்சியர் கார்த்திகேயன் தகவல்

புதன் 25, டிசம்பர் 2024 4:17:53 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் காரணமாக குழந்தை திருமணங்கள் 50 சதவீகிதம் குறைந்துள்ளது என மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன்   தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட குழந்தை திருமணம் அதிகரித்துள்ளதாக The New Indian Express நாளிதழில் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் களப்பணிகள், சட்ட நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு காரணமாக, குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட சுமார் 49.4% குறைந்துள்ளது. 2023-ல் 95 குழந்தை திருமணங்கள் நடைபெற்ற நிலையில் 2024-ல் அது 52 ஆக குறைந்துள்ளது. இவற்றில் பெரும்பாலனவை 17 வயது முதல் 19 வயதிற்குட்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தித்தாளில் வரப்பெற்றுள்ளது இந்த ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தை திருமணம் தொடர்பாக வரப்பெற்ற மொத்த புகார்களின் எண்ணிக்கையே ஆகும். இவ்வாண்டில் வரப்பெற்ற 134 புகார்களில் 32 நேர்வுகளில் குழந்தை திருமணம் அலுவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் இந்த ஆண்டில் நடைபெற்ற 52 நேர்வுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 2022-ல் நடைபெற்ற குழந்தை திருமணம் தொடர்பாக 4 புகார்களும் 2023-ல் நடைபெற்ற குழந்தை திருமணம் தொடர்பாக 46 புகார்களும் இந்த ஆண்டில் வரப்பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் முதன்முறையாக திருநெல்வேலி மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாம் செவ்வாய் கிழமைகளில் அனைத்து வட்டாரங்களிலும் குழந்தை திருமணம், பள்ளி இடைநிற்றல் தடுப்பு, வளரிளம் பெண்கள் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மேம்பாடு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் உள்ளிட்ட குழந்தைகள் நலம் சார்ந்த நடவடிக்கைகள் தொடர்பாக பல்துறை ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்படுகின்றது.  மேலும், ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் குழந்தை திருமணம் தொடர்பான நடவடிக்கைகளை ஆய்வு செய்து நடைபெற்ற குழந்தை திருமணம் அனைத்திற்கும் முதல் தகவல் அறிக்கை (FIR)  பதிவு செய்வதும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதும் உறுதி செய்யப்படுகிறது.

கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்பட்டு,  மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமும் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. பள்ளி இடைநிற்றலை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. மானூர், அம்பாசமுத்திரம், வள்ளியூர், களக்காடு மற்றும் இராதாபுரம் ஆகிய இடங்களில் மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கான சிறப்பு மையங்கள் அமைக்ப்பட்டுள்ளது.

குழந்தை திருமணங்கள் நடைபெற்ற இடங்களில் அது குறித்த விரிவான தணிக்கை (Child Marriage Audit) செய்யப்பட்டு அதன்படி கிராமத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை மற்றும் குழந்தை திருமணங்களை முற்றிலும் தடுக்க உள்ளாட்சி பிரதிநிதிகள், அங்கன்வாடி பணியாளர், மகளிர் சுய உதவி குழுக்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.  பள்ளி கல்வித்துறை, காவல்துறை, குழந்தைகள் பாதுகாப்பு துறை, வருவாய்துறை மற்றும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து ‘அன்பாடும் மூன்றில்’ நிகழ்ச்சியின் மூலம் மாணவ மாணவிகளுக்கு தொடர் விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும், இப்பணிகள் அனைத்தும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இதற்கென திருநெல்வேலி மற்றும் வள்ளியூரில் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre), மாவட்ட மகளிர் அதிகார மையம் (HUB) மூலம் தொடர்ந்து ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், காவல் துறை மேற்கொண்ட தீவிர நடவடிக்கை உள்ளிட்ட கள செயல்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற குழந்தை திருமணங்களில் கூட தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முந்தைய ஆண்டுகளை போல் அல்லாமல் கடந்த சில ஆண்டுகளாக அனைத்து குழந்தை திருமணங்கள் நிகழ்வுகளிலும் தீவிர நடவடிக்கை எடுக்க அரசால் உத்தரவிடப்பட்டு ,அதன்படி அனைத்து நிகழ்வுகளிலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவது உறுதி செய்யப்படுகிறது. இதனால் குழந்தை திருமணங்கள் செய்வோர் மீது கட்டாயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே எண்ணிக்கை அதிகரித்தது போல தெரிகிறது. 

உண்மையில் அரசின் தொடர் தீவிர நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகள் காரணமாக இதன் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் தீவிர கள நடவடிக்கைகள் காரணமாக குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருகிறது. இனி வரும் காலங்களில் குழந்தை திருமணங்கள் முற்றிலும் தடுத்திட அரசுத்துறைகள், மகளிர் குழுக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் இணைந்து தொடர்ந்து களப்பணிகள் மேற்கொள்ப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன்  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory