» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை அருகே கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் 16 லாரிகளில் கேரளாவுக்கு அனுப்பி வைப்பு!

திங்கள் 23, டிசம்பர் 2024 10:54:48 AM (IST)

திருநெல்வேலி அருகே கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவின்படி கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

திருநெல்வேலி அருகேயுள்ள நடுக்கல்லூா், பழவூா், கொண்டாநகரம் சுற்றுவட்டார மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள், பட்டா நிலங்கள், நீா்நிலைகளில் கேரள மாநில கழிவுகளை லாரிகளில் கொண்டு வந்து மா்மநபா்கள் கொட்டினா். கடந்த வாரத்தில் நூற்றுக்கணக்கான மூட்டைகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

அவை, திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டுவரப்பட்டதற்கான ரசீதுகளும் கைப்பற்றப்பட்டன. இதைகொட்டியவா்கள் மீது கடும் நடவடிக்கை எ டுக்க வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினா்.

இதையடுத்து, கழிவுகளைக் கொட்டியது தொடா்பாக மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின்பேரில் சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இவ் வழக்கு தொடா்பாக கேரள கழிவுகளை சுத்தமல்லி பகுதியில் கொட்டி தீயிட்டு எரிக்க உதவியதாக மனோகா், மாயாண்டி ஆகியோரை முதலில் போலீஸாா் கைது செய்தனா்.

தொடா்ந்து கழிவுகளை ஏற்றி வர பயன்படுத்தப்பட்ட லாரியை சேலம் மாவட்டத்தில் போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் லாரி ஓட்டுநரான சேலம் மாவட்டம், இலத்தூா், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்லதுரை (37), மருத்துவக் கழிவுகளை அழிக்கும் தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த கேரள மாநிலம், கண்ணூா் மாவட்டம், இடாவேலியைச் சோ்ந்த ஜித்தன் ஜோ்ச் (40) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இதற்கிடையே கேரள கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்பட்டது குறித்த தகவல் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவிய நிலையில், தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், தமிழக வழக்குரைஞரும் எடுத்துரைத்தாா்.

தொடா்ந்து, திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் பசுமைத் தீா்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கேரள மாநில குப்பைகளைத் திருப்பி எடுத்துச் செல்ல உத்தரவிட வலியுறுத்தப்பட்டது. அதன்பேரில், கேரள அரசு கழிவுகளை மீண்டும் எடுத்துச் சென்று மேலாண்மை செய்ய வேண்டும்.

இல்லையெனில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதற்கான நடவடிக்கை எடுத்து, அதற்கான செலவினத்தை கேரள மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் வசூலிக்க வேண்டுமென தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது. அதன்பேரில் கேரள மாநில வருவாய்த்துறையினா், சுகாதாரத்துறையினா் நேரில் வந்து ஆய்வு செய்து கழிவுகளின் மாதிரிகளையும் சேகரித்து சென்றனா். மேலும், குப்பைகளை மீண்டும் எடுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுத்தனா்.

கழிவுகளை மீண்டும் கேரளத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் 16 லாரிகள் கேரளத்தில் இருந்து நடுக்கல்லூா் பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டன. திருவனந்தபுரம் மாவட்ட உதவி ஆட்சியா் சாக்ஷி, திருவனந்தபுரம் மாநகராட்சி சுகாதார அதிகாரி கோபுகுமாா், கேரள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஊழியா்கள் உள்பட மொத்தம் 70 போ் கொண்ட குழுவினா் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்தனா்.

சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அா்பித் ஜெயின், உதவி ஆட்சியா் அம்பிகா ஜெயின் மற்றும் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், வருவாய்த்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனா். நடுக்கல்லூா், பழவூா், கொண்டாநகரம் உள்பட 6 இடங்களில் கொட்டப்பட்டிருந்த மருத்துவக் கழிவுகள் 8 பொக்லைன் இயந்திரங்களின் உதவியோடு லாரிகளில் ஏற்றப்பட்டன.

மாவட்ட காவல் துறை சாா்பில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. காலை 7.30 மணி முதல் மாலை வரை கழிவுகளை லாரிகளில் ஏற்றும் பணி நடைபெற்றது. பின்னா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தமிழக எல்லை வரை லாரிகள் சென்றன.

தரம் பிரித்து மேலாண்மை: இதுகுறித்து கேரள அதிகாரிகள் கூறுகையில், தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவின்பேரில், தமிழக மற்றும் கேரள அரசுகளின் கண்காணிப்பில் இந்தக் கழிவுகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இவை அனைத்தும் கேரளத்தில் மீண்டும் தரம்பிரிக்கப்படும். திடக்கழிவுகள் தனியாகவும், மருத்துவக் கழிவுகள் தனியாகவும் உரிய விதிகளின்படி அழிக்கப்படும் என்றனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மருத்துவக் கழிவுகளை திருப்பி அனுப்பும் பணியை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் காா்த்திகேயன் கூறுகையில், திருநெல்வேலி அருகே கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்ட பின்பு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறும். தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் வழிகாட்டுதல் படியும் தமிழ்நாடு அரசின் உத்தரவு படியும் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

கழிவுகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் காவல்துறை பாதுகாப்போடு கேரள மாநில எல்லை வரை அனுப்பப்படும். அரசின் உத்தரவின்பேரில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 16 சோதனை சாவடிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள இரண்டு சோதனை சாவடிகளிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்படும். இம்மாவட்ட பகுதியில் கழிவுகளைக் கொட்டுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory