» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி இருவார சிறப்பு முகாம்: ஆட்சியர் கார்த்திகேயன் தகவல்
சனி 25, ஜனவரி 2025 11:39:21 AM (IST)
நெல்லை மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி இருவார சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இருவார கோழிக்கழிச்சல் தடுப்பு முகாம் தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 01 முதல் 14 முடிய இரண்டு வாரங்கள் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. கோழிக்கழிச்சல் நோய் என்பது கோழிகளை தாக்கும் ஒருவிதமான வைரஸ் நோய். இந்நோய் கண்ட கோழிகளில் இறப்பு நேரிடலாம். இந்த நோய்க்கு சிகிச்சை இல்லை. தடுப்பூசிபோடுவதன் மூலம் தான் இந்த நோயை தடுக்க இயலும்.
இந்த தடுப்பூசி அனைத்து கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளைநிலையங்களில் வாரா வாரம் இடப்படுகிறது. வருடம் ஒருமுறை சிறப்பு முகாமாக இருவார கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் அனைத்து கிராமங்களில் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் இந்த முகாமினை நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் தடுப்பூசி இட்டு கோழிக்கழிச்சல் நோயிலிருந்து தங்கள் கோழிகளை காப்பாற்றி பொருளாதார முன்னேற்றம் அடையுமாறு ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.