» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
விபத்தில் பலியான 5 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் நல்லடக்கம்: கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி!!
திங்கள் 19, மே 2025 9:24:45 PM (IST)

கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 5 பேர் உடல்களும் வெள்ளாளன் விளையில் கிறிஸ்தவ முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள வெள்ளாளன்விளையை சேர்ந்தவர் மோசஸ் (50).இவர் கோவை துடியலூரில் மளிகை கடை நடத்தி வந்தார். இதனால் அங்கு அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் சொந்த ஊரில் உள்ள கிறிஸ்தவ ஆலய பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக காரில் தனது குடும்பத்தினருடன் வந்தார்.
நேற்று முன்தினம் குற்றாலத்திற்கு சென்று விட்டு நெல்லை மூலைக் கரைப்பட்டி வழியாக வெள்ளாளன் விளைக்கு சென்றனர். காரை மோசஸ் ஓட்டி சென்றார். சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தரைமட்ட கிணற்றுக்குள் கார் பாய்ந்தது.
அப்போது கிணற்றில் தத்தளித்த மோசஸ் மகன் ஜெர்சோம், ரவி கோவில்பிச்சை மகள் ஜெனிபர் எஸ்தர், செர்சோம் மனைவி சைனி கிருபாகரன் (26) ஆகிய 3 பேரும் மீட்கப்பட்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார், தீயணைப்பு படையினர் சென்றனர். இதற்கிடையே தகவல் அறிந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அங்கு சென்று மீட்பு பணிகளை துரிதப் படுத்தினார்.
சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிணற்றில் இருந்து கார் வெளியே எடுக்கப்பட்டது. காரில் இருந்த மோசஸ், அவரது மனைவி வசந்தா(49), ரவி கோவில்பிச்சை, அவரது மனைவி கெத்சியாள் கிருபா, ஜெர்சோமின் பெண் குழந்தையான ஷாலின் (1½) ஆகிய5 பேர் பரிதாபமாக இறந்தனர். மீட்கப்பட்ட 5 பேரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார். மேலும் மீட்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
உயிரிழந்த 5 பேரின் உடல்கள் நேற்று நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது இறந்தவர்களின் உடல்களுக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து அவர்களது உடல் சொந்த ஊரான வெள்ளாளன் விளைக்கு எடுத்து செல்லப்பட்டது.
அங்கு ஊர் மக்கள் முன்னிலையில் அங்குள்ள சி.எஸ்.ஐ. கல்லறை தோட்டத்தில் 5 பேர் உடல்களும் அருகருகே கிறிஸ்தவ முறைப்படி பிரார்த்தனை செய்யப்பட்டு அவர்களது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அப்போது ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி இன்ஸ்பெக்டர் இன்னோசி குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இராதாபுரம் வட்டத்தில் வளர்ச்சித்திட்டப் பணிகள்: சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு ஆய்வு
புதன் 21, மே 2025 5:44:10 PM (IST)

அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
புதன் 21, மே 2025 4:05:17 PM (IST)

அரசு பஸ் கண்டக்டர் கார் ஏற்றி படுகொலை : மனைவி, கள்ளக்காதலன் உட்பட 3பேர் கைது!
புதன் 21, மே 2025 12:52:59 PM (IST)

உயர்கல்வியினை ஆலோசித்து தேர்வு செய்ய வேண்டும்: ஆட்சியர் இரா.சுகுமார் அறிவுரை
செவ்வாய் 20, மே 2025 12:03:14 PM (IST)

அம்பையில் பொதுமக்களை அச்சுறுத்திய கரடி பிடிபட்டது...!
செவ்வாய் 20, மே 2025 10:53:26 AM (IST)

திருநெல்வேலியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
திங்கள் 19, மே 2025 3:24:44 PM (IST)
