» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுகவின் மன்னராட்சிக்கு பெண்கள் முடிவு கட்டுவார்கள்: த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு

வெள்ளி 28, மார்ச் 2025 4:16:38 PM (IST)



மன்னராட்சி முதல்-அமைச்சர் அவர்களே.... உங்கள் ஆட்சிக்கு பெண்கள் முடிவு கட்டப்போகிறார்கள் என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் விமர்சித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேசியதாவது: என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கும், தோழிகளுக்கும் வணக்கம்... வணக்கம்.. கதறல் சத்தம் எல்லாம் எப்படி இருக்கிறது. ஒவ்வொரு குடும்பமும் வாழ் வேண்டும் என்பது நல்ல அரசியலா?.; இல்லை ஒரு குடும்பம் மட்டும் வாழ வேண்டும் என்பது நல்ல அரசியலா?. மாநாட்டில் இருந்து தற்போது வரை இடையூறு வந்து கொண்டு தான் இருக்கிறது. எத்தனை தடைகள் வந்தாலும் தவெக முன்னேறி செல்லும். ரசிகர்கள், தொண்டர்களுக்கு தடை போட நீங்கள் யார்?.

சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அமைதியாக இருக்கிறேன். அணை போட்டு ஆற்றை தடுக்கலாம் காற்றை தடுக்க முடியாது. அப்படி தடுக்க நினைத்தால் சூறாவளி காற்றாக ஏன் புயலாக கூட மாறும். பல்வேறு சோதனைகளைக் கடந்துமக்கள் சந்திப்பு தோழர்கள் சந்திப்பு நடந்து கொண்டு தான் இருக்கிறது இனியும் நடக்கும்.

மன்னராட்சி முதல்-அமைச்சர் அவர்களே.... முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே... பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் மட்டும் போதாதே முதல்-அமைச்சர் அவர்களே.... செயலிலும் காட்ட வேண்டும் அவர்களே!... பாஜக ஆட்சியை பாசிச ஆட்சி என்று சொல்லிவிட்டு நீங்கள் செய்யும் ஆட்சி என்ன?. அதற்கு கொஞ்சம் கூட குறையாத பாசிச ஆட்சித்தானே. மக்கள் விரோத ஆட்சியை, மன்னராட்சி போல செய்கிறார்கள். கேள்வி கேட்டால் கோபம் வருகிறது.. விமர்சித்தால் மட்டும் கோபப்படுகிறார் முதல்-அமைச்சர். உங்கள் ஆட்சிக்கு பெண்கள் முடிவு கட்ட போகிறார்கள்.

பொண்ணுங்களுக்கு நடக்குற கொடுமைகளை சொல்ல முடியல சார்... இதுல உங்கள அப்பானு சொல்றோம்னு வேற சொல்றீங்க... உங்க கொடுமைகளை அனுபவிக்கும் என் சகோதரிகள்தான் உங்க அரசியலுக்கும், ஆட்சிக்கும் முடிவு கட்டப்போகிறார்கள். திமுக ஓட்டுக்காக காங்கிரஸோடு தேர்தல் கூட்டணி அமைத்துள்ளது. கொள்ளையடிக்க மறைமுகமாக பாஜகவோடு கூட்டணி வைத்துள்ளது. பரந்தூர் போராட்டம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் என பல போராட்டங்கள் சொல்லி கொண்டே போகலாம். இது அனைத்திற்கும் தவெக உடன் நிற்கும்.

தமிழ்நாடு பிளவுவாத சக்திகளுக்கு எதிரான மண். இதனை நாம் பாத்துக்க வேண்டும். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வரும் செய்திகள் மனவேதனையை தருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருப்பதாகவே தெரியவில்லை. அதற்கு இந்த கரப்ஷன் கபடதாரி அரசு தான் காரணம். இந்த நிலைமை மாற வேண்டும். அதற்கு இருக்கின்ற ஒரே வழி, இங்கே மக்களாட்சி மலர வேண்டும். அது வர வேண்டும் என்றால், இவர்களை மாற்ற வேண்டும். அதனை செய்ய தவெக தொண்டர்கள் மக்களை தினமும் சந்திக்க வேண்டும். அவர்களின் பிரச்சினைகளை கேளுங்கள். அதை தீர்த்தால் நம் மீது நம்பிக்கை வரும். அதன்பின் ஒவ்வொரு வீட்டிலும் தவெக கொடி பறக்கும்.

"மாண்புமிகு மோடி ஜீ அவர்களே... என்னமோ உங்க பேரெல்லாம் சொல்ல எங்களுக்கு பயம் மாதிரி சொல்லிடுறீங்க; ஏன் ஜீ... தமிழ்நாடு தமிழர்கள்னாலே அலர்ஜி?. தமிழ்நாட்டில் இருந்து வரும் ஜி.எஸ்.டி.யை வாங்கிக்கிறீங்க, ஆனா பட்ஜெட்ல நிதியை தரமாட்றீங்க... இங்க உள்ள பிள்ளைகளுக்கு நிதி தராம மும்மொழிக் கொள்கையை திணிக்கிறீங்க. தமிழ்நாட்டிடம் விளையாடாதீர்கள் பிரதமர் சார்... பலருக்கு தண்ணி காட்டிய மாநிலம் தமிழ்நாடு. இதுவரைக்கும் சந்திக்காத வித்தியாசமான தேர்தலை அடுத்த வருடம் தமிழ்நாடு சந்திக்கும். தமிழகத்தில் இரண்டு முனை போட்டிதான். அது தவெக மற்றும் திமுக இடையே தான்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory