» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சதாவதானி செய்குதம்பி பாவலர் 151-வது பிறந்த நாள்: ஆட்சியர் மரியாதை செலுத்தினார்!

வியாழன் 31, ஜூலை 2025 12:41:20 PM (IST)

May be an image of 11 people, flute and temple

நாகர்கோவிலில் மகாமதி சதாவதானி செய்குதம்பி பாவலர் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, அன்னாரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கீழ் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட இடலாக்குடியில் அமைந்துள்ள மகாமதி சதாவதானி செய்குதம்பி பாவலர் அவர்களின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு, சதாவதானி செய்குதம்பி பாவலர் நினைவு மண்டபத்திலுள்ள, அன்னாரது திருவுருவ படத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவர் என்.சுரேஷ் ராஜன் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில் இன்று (31.07.2025) மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர், தெரிவிக்கையில்: மகாமதி சதாவதானி செய்குதம்பி பாவலர் நினைவை போற்றிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் பாவலர் பிறந்தநாளான ஜூலை 31 -ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சதாவதானி செய்குதம்பி பாவலர் அவர்களின் 151-வது பிறந்தநாளினையொட்டி, அன்னாரது திருவுருப் படத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மரியாதை செலுத்தப்பட்டது.

சதாவதானி கி.பி 1874 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31-ஆம் தேதி, எளிய இஸ்லாமிய குடும்பத்தில் பக்கீர் மீரான், உம்மாள் ஆமீனா தம்பதிக்கு கன்னியாகுமரி மாவட்டம், கோட்டார் இடலாக்குடியில் மகனாக பிறந்தார். இலக்கண, இலக்கியங்களை சிறப்பாக கற்று தேர்ந்த செய்குதம்பி , தனது இனிய கவிதைகளை பிழையில்லாமல் எடுத்துக்கூறும் அளவிற்கு வல்லமை பெற்றவர். இளம் வயதிலேயே கவிபாடும் திறம் இருந்தமையால் அனைவராலும் பாவலர் என்று அழைக்கப்பட்டார்.

1907 ம் ஆண்டு மார்ச் திங்கள் 10ஆம் நாள் சென்னை விக்டோரியா நினைவு மண்டபத்தில் வித்துவான் கண்ணபிரான் முதலியார் தலைமையில் நடைபெற்ற 100 செயல்களைக் கொண்ட சாதவதான நிகழ்ச்சியில் சதாவதானம் செய்து சாதனைப் படைத்தார். மேலும், சுதந்திர போராட்ட காலக்கட்டத்தில் நாஞ்சில் வள நாட்டில் தேசிய விடுதலை உணர்வூட்டும் பணிகளை மேற்கொண்ட பாவலர் சுதந்திர இந்தியாவை கண்டுவிட்ட பின்னர் கி.பி 1950 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ஆம் நாள் பாவலர் காலமானார்கள். அவரது பணியினை நினைவு கூறும் வகையில் பாராட்டும் விதமாக அவரது பிறந்த நாளான ஜூலை 31-ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும், சதாவதானி செய்குதம்பி பாவலர் அவர்களின் புகழ் என்றும் மறவாமல் இந்திய மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று 2008-ஆம் ஆண்டு டாக்டர்.கலைஞர் சதாவதானி பாவலர் எழுதிய நூல்களை நாட்டுடைமை ஆக்கியதோடு, மத்திய அரசிற்கு பரிந்துரைத்து சதாவதானி செய்குதம்பி பாவலர் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. பாவலர் புகழ் என்றென்றும் வரலாற்றில் நிலைத்திருக்கும் என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் முருகன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வலெட் சுஷ்மா, நாகர்கோவில் மாநராட்சி உறுப்பினர்கள் ரிஸ்வானா ஹிதாயத், பியாசா ஹாஜி பாபு, சொர்ணத்தாய், சுப்பிரமணியம், பாவலர் செய்குதம்பி அவர்களின் மகன் வழி பேரன் கவிஞர் ஜமால் முகமது, கொள்ளு பேரன் ஷபிக் மீரான், வழக்கறிஞர் சிவராஜ், முன்னாள் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் அருண்காந்த், சுரேஷ், ஹாஜி பாபு, சேக் ஹிதாயத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory