» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கிளாம்பாக்கத்தில் ரூ.18 கோடியில் காவல் நிலையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

செவ்வாய் 5, ஆகஸ்ட் 2025 5:51:52 PM (IST)

கிளாம்பாக்கத்தில் ரூ.18 கோடியில் காவல் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 18.26 கோடி ரூபாய் செலவில் 30,000 சதுர அடி கட்டிட பரப்பளவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் காவல் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இக்காவல் நிலையக் கட்டிடம், காவல் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் அறை, கட்டுபாட்டு அறை, கண்காணிப்பு அறை, கைதிகள் அறை, உணவருந்தும் அறை, ஆடவர் மற்றும் மகளிர் ஓய்வு அறை, பொதுமக்கள் கலந்தாய்வு கூடம், காத்திருப்புக் கூடம், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்த பஸ் நிலையத்தில் தினசரி 2,500 பஸ்கள் இயக்கப்பட்டு, சாதாரண நாட்களில் 50 ஆயிரம் பயணிகளும், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் சுமார் 2 லட்சம் பயணிகளும் பயன்படுத்துகின்றனர். பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

பெரம்பூர், மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிங்கார சென்னை 2.0 மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ், 9.74 கோடி ரூபாய் செலவில் 24,000 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டு உள்ள கூடுதல் பள்ளிக் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, வகுப்பறைகள், ஆய்வுக்கூடம், கழிப்பறைகள் போன்றவற்றை பார்வையிட்டார். மேலும், வகுப்பறைக்கு நேரில் சென்று மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

இக்கூடுதல் பள்ளிக் கட்டடத்தின் தரைத்தளத்தில் 3 வகுப்பறைகள், ஆய்வகம், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக அறைகள், முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் தலா 6 வகுப்பறைகள் மற்றும் ஆய்வக அறை, மூன்றாம் தளத்தில் 3 வகுப்பறைகள், கலையரங்கம் ஆகியவற்றுடன் கூடிய இணைப்புக் கட்டடம் ஆகியவை கட்டப்பட்டு உள்ளது.

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் கொளத்தூரில் 11.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 29,514 சதுர அடி கட்டட பரப்பளவில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் கட்டப்பட உள்ள புதிய காவல் துணை ஆணையர் அலுவலகம், பெரவள்ளூர் காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு பிரிவு, போக்குவரத்து காவல் பிரிவு, சைபர் குற்றப்பிரிவுக் கட்டடம், கொளத்தூர், ரெட்டேரியில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 1.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன கழிப்பிட வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பஸ் நிறுத்தம், சென்னை மாநகராட்சி சார்பில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 3.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6-வது மண்டலம்,

70-வது வார்டு, பில்கிங்டன் சாலையில் அமைந்துள்ள ரெயில்வே ஆன்ஸ்லே வாய்க்கால் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் மற்றும் மண்டலம்-6ல், 1 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 69வது வார்டு, ரங்கசாமி தெரு மற்றும் லோகோ ஸ்கீம் 1-வது பிரதான சாலையில் அமைந்துள்ள விளையாட்டு மைதானங்கள் மற்றும் வார்டு-64, 65, 67, 69 ஆகியவற்றில் உள்ள ஒன்பது பூங்காக்களை மேம்படுத்தும் பணிகள் என மொத்தம் 17 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொளத்தூரில் தனியார் உடற்பயிற்சிக் கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் சேதமடைந்த இருசக்கர வாகனங்களுக்கு மாற்றாக பாதிக்கப்பட்ட மூன்று நபர்களுக்கு புதிய இருசக்கர வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், துணை மேயர் மகேஷ்குமார், போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory