» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சுற்றுலா படகு ஆன்லைன் பயணச்சீட்டு பதிவு : அமைச்சர்மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 4:13:59 PM (IST)

சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு சேவையின் இணைய வழி பயணச்சீட்டு பதிவு வசதியினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக கன்னியாகுமரி பிரிவு சார்பில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு சேவையின் இணையவழி பயணச்சீட்டு சேவை துவக்க விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் இன்று (08.08.2025) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் கலந்து கொண்டு இணையவழி பயணச்சீட்டு பதிவு செய்யும் வசதியினை துவக்கி வைத்து பேசுகையில்- பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் கன்னியாகுமரி பிரிவு 17.08.1984ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் வாயிலாக விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கும் சுற்றுலா பயணிகளை விசைப்படகுகளில் ஏற்றிச் செல்கிறது.
பூம்புகாருக்கு சொந்தமாக 5 படகுகள் உள்ளன. அதில் 4 படகுகளில் ஒரு படகுக்கு 150 சுற்றுலா பயணிகளும், மீதமுள்ள 1 படகில் 75 சுற்றுலா பயணிகளும் பயணம் செய்ய முடியும். சீசன் நேரங்களில் ஒரு நாளைக்கு 10,000 முதல் 12,000 சுற்றுலா பயணிகளும், சீசன் இல்லாத நேரங்களில் 5000 முதல் 6000 சுற்றுலா பயணிகளும் படகுகளில் பயணம் செய்கிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் அய்யன் திருவள்ளுவர் சிலை 25ம்ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியில் முக்கடல் சங்கமிக்கும் குமரிமுனையில் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் அய்யன் திருவள்ளுவர் சிலையை கண்டுகளிக்கவும், படகு சவாரி வசதியை மேம்படுத்துவதற்காக 3 புதிய பயணிகள் படகுகள் வாங்கப்படும் என அறிவித்தார்கள்.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகனாந்தர் பாறையை இணைத்து கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழை தரைத்தள பாலத்தினை திறந்து வைத்ததைத் தொடர்ந்து, 01.01.2025 முதல் இதுநாள் வரை வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் சுமார் 16 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து அய்யன் திருவள்ளுவர் சிலையினை கண்டு களிப்பதோடு, கண்ணாடி இழை தரைத்தளபாலம் வாயிலாக நடந்து சென்று கடலின் அழகினை கண்டு பெருமிதம் அடைகின்றனர்.
மேலும் விடுமுறை நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை புரிவதால் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக பூம்புகார் கப்பல் கழகத்தில் 3 பயணிகள் படகுகள் வாங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கண்ணாடி பாலம் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் நுழைவுச்சீட்டு வாங்குவதற்கு வெயிலில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை இருந்தது. இதனை கருத்தில் கொண்டு, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ரூ.9 இலட்சம் மதிப்பில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் நிழற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஆன்லைன் மூலமாக நுழைவுச்சீட்டு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, எல்காட் உதவியுடன் அதற்காக புதுப்பிக்கப்பட்ட புதிய இணையத்தளம் துவக்கப்பட்டு, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு சேவையின் இணையவழி பயணச்சீட்டு பதிவு செய்யும் முறை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
சுற்றுலா பயணிகள் விவேகனாந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையினை பார்வையிட முன்னதாகவே www.psckfs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக நுழைவுசீட்டு பதிவு கொள்ளலாம். ஒரு நாளைக்கு 50 நபர்கள் சாதாரண கட்டணம் ரூ.100க்கும், 175 நபர்கள் சிறப்பு கட்டணமாக ரூ.300க்கும் முன்பதிவு செய்யலாம்.
24 மணி நேரமும் முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்தவர்களுக்கு தங்களது செல்லிடைப்பேசியில் பயணத்திற்கான நாள், நேரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் தங்கள் முன்பதிவு செய்த இ-நுழைவுச்சீட்டினை கொண்டு வந்து, ஆன்லைன் முன்பதிவு செய்பவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள வரிசையில் நின்று QR கோட்டினை சரிபார்த்தபின், பயணம் மேற்கொள்ளலாம்.
படகு போக்குவரத்து சேவையானது காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒருமுறை பயணிகளை ஏற்றிச்செல்வார்கள். மேலும் படகு சேவையானது வானிலை, அலைகள், காற்று மற்றும் அலை நிலைமைகளுக்கு உட்பட்டு, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தால் சேவை ரத்து செய்யப்படும் போது அன்று பதிவு செய்த சுற்றுலா பயணிகளின் வங்கி கணக்கிற்கு பணமானது வரவு வைக்கப்படும்.
அன்று முன்பதிவு செய்த நுழைவுச்சீட்டினை திரும்ப பயன்படுத்த இயலாது. இதன் வாயிலாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆன்லைன் வாயிலாக நுழைவுசீட்டு பதிவு செய்து, நீண்ட நேரம் வரிசையில் நிற்கமால் படகு பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் பேசினார்கள்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு உணவு ஆணையத்தின் தலைவர் என்.சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக பொது மேலாளர் (சென்னை) தியாகராஜன், மாவட்ட தகவலியல் அலுவலர் சேக் முகம்மது, கன்னியாகுமரி நகர்மன்ற தலைவர் குமரி ஸ்டீபன், பூம்புகார் மேலாளர் முருகபூபதி, பூம்புகார் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சௌந்தர பாண்டியன், துணை மேலாளர் விஸ்வநாதன், படகு ஓட்டுநர் சகாய மைக்கிலின், துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல், ஹரிநாராயணன், அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை ஆலோசனை குழு உறுப்பினர் தாமரை பாரதி, அகஸ்தீஸ்வரம் வட்டார மருத்துவ ஆலோசனை குழு உறுப்பினர் பாபு, முன்னாள் தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பூதலிங்கம், துறை அலுவலர்கள், சுற்றுலா பயணிகள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 5:48:59 PM (IST)

புத்தேரி நான்கு வழி சாலைப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் ஆய்வு
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 5:31:36 PM (IST)

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ராமதாஸ் வரமாட்டார் : வழக்கறிஞர் தகவல்
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 5:14:35 PM (IST)

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் விரைவில் நலம்பெற விழைகிறேன்: மு.க.ஸ்டாலின் பதிவு
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 4:34:22 PM (IST)

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 4:32:11 PM (IST)

காரில் ஏற்ற மறுத்தாரா எடப்பாடி பழனிசாமி..? வீடியோவுக்கு செல்லூர் ராஜு விளக்கம்!!
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 4:03:14 PM (IST)
