» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கவுரவ பேராசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

புதன் 27, ஆகஸ்ட் 2025 5:42:34 PM (IST)

தமிழ்நாட்டில் கவுரவ விரிவுரையாளர்கள் மீது நடத்தப்படும் உழைப்புச் சுரண்டலை தி.மு.க. அரசு கைவிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு, நிரந்தர உதவிப் பேராசிரியர்களுடன் ஒப்பிடும்போது மிகக்குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்படுவதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஒரே மாதிரியான பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு பாகுபாடான வகையில் ஊதியம் வழங்கப்படுவது கண்ணியமற்ற செயல் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில், இதற்கு காரணமான மாநில அரசுகள் தலைகுனிய வேண்டும்.

கவுரவ விரிவுரையாளர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் வெறும் ரூ.10,000 தான் ஊதியம் வழங்கப்பட்டது. பல ஆண்டுகளைக் கடந்து இப்போதும் கூட ரூ.25,000 மட்டும் தான் ஊதியம் வழங்கப்படுகிறது. கவுரவ விரிவுரையாளர்களுக்கு இந்தியாவிலேயே மிகக் குறைந்த ஊதியம் வழங்கும் மாநிலம் தமிழகம் தான். இது தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவு. தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள் இயங்குவதற்கு காரணமே கவுரவ விரிவுரையாளர்கள் தான். 

மாநிலம் முழுவதும் கல்லூரிகளில் உள்ள 10,500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 9000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை 8000க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்களை நியமித்து தான் தமிழக அரசு சமாளித்து வருகிறது. பல கல்லூரிகளில் பல துறைகளில் ஒரே ஒரு நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் இல்லாத நிலையில், அத்துறைகளின் துறைத் தலைவர் பொறுப்புகளையும் கவுரவ விரிவுரையாளர்கள் தான் கவனித்து வருகின்றனர். அவர்களுக்கு ரூ.25,000 மட்டுமே ஊதியம் தரப்படுகிறது.

கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஒரு பாட வேளைக்கு ரூ.1500 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.50000 மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு 28.01.2019-ந் தேதி ஆணையிட்டது. அதை செயல்படுத்த வேண்டும் என பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.50 ஆயிரமாக உயர்த்த முடியாது என்று தமிழக அரசு அறிவித்து விட்டது. கவுரவ விரிவுரையாளர்களை தமிழக அரசு எவ்வளவு கண்ணியக்குறைவாகவும், அவமரியாதையாகவும் நடத்துகிறது என்பதற்கு இதுவே சாட்சி.

குஜராத் ஒப்பந்த உதவிப் பேராசிரியர்கள் வழக்கில் இப்போது உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கும் கருத்துகள் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். உதவிப் பேராசிரியர்களின் உழைப்புச் சுரண்டல் குறித்த உச்சநீதி மன்றத்தின் கண்டனத்தை தமிழக அரசு மதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் கவுரவ விரிவுரையாளர்கள் மீது நடத்தப்படும் உழைப்புச் சுரண்டலை தி.மு.க. அரசு கைவிட வேண்டும். அவர்களுக்கு உடனடியாக பணி நிலைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory