» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி உள்பட 6 கடற்கரைகளில் நீலக்கொடி திட்டத்தை செயல்படுத்த அனுமதி

வியாழன் 28, ஆகஸ்ட் 2025 8:02:02 AM (IST)

சென்னை, தூத்துக்குடி, கடலூர் உள்பட 6 கடற்கரைகளில் நீலக்கொடி சான்றிதழ் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளித்தும், அதற்காக ரூ.24 கோடி நிதி ஒதுக்கியும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நீரின் தரம், பாதுகாப்பு மற்றும் நிலையான சுற்றுலா வசதிகள் போன்ற பல தகுதிகளை கொண்ட கடற்கரைகள் நீலக்கொடி சான்றிதழ் பெறுகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் கோவளம் கடற்கரை முதல் நீலக்கொடி சான்றிதழ் பெற்ற கடற்கரை ஆகும். அதனைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரை நீலக்கொடி சான்றிதழை பெற்றது.

இதன் தொடர்ச்சியாக சென்னையில் திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி கடற்கரைகள், தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரப்பட்டினம், விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்புதுப்பட்டு, கடலூர் மாவட்டத்தில் சாமியார்பேட்டை கடற்கரைகள் என மொத்தம் 6 கடற்கரைகள் நீலக்கொடி சான்றிதழ் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இந்த கடற்கரைகள் நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான சுற்றுச்சூழல் மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் சேவைகள் ஆகியவற்றின் கீழ் வரும் 33 விதமான அளவுகோல்களை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மேற்சொன்ன 6 கடற்கரைகளில் நீலக்கொடி சான்றிதழ் திட்டத்தை செயல்படுத்துவதற்கான உத்தரவுகளை வெளியிட அரசிடம், தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு இயக்கம், தமிழ்நாடு கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதாரத்தின் தலைமை திட்ட இயக்குனர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குனர் கேட்டு இருந்தனர்.

அதனை அரசு கவனமுடன் பரிசீலித்து, ஏற்றுக்கொண்டு அந்த 6 கடற்கரைகளில் நீலக்கொடி சான்றிதழ் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.24 கோடி நிதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது ஒவ்வொரு கடற்கரைக்கும் ரூ.4 கோடி என்ற வீதத்தில் 6 கடற்கரைகளுக்கு ரூ.24 கோடியை ஒதுக்கி சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு அரசாணை வெளியிட்டுள்ளார்.

இதில் ஒவ்வொரு கடற்கரையும் ரூ.3 கோடி மதிப்பில் கழிவறை வசதி, திடக்கழிவு மேலாண்மை, சோலார் வசதி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சி.சி.டி.வி. வசதிகள், வாகன நிறுத்தும் இடங்கள், சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்ளவும், மற்ற பணிகளுக்கு ரூ.1 கோடியும் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory