» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மத்திய அரசு தேர்வில் ஆள்மாறாட்டம்: 2 ரயில்வே அதிகாரிகள் கைது; இந்தி ஆசிரியரும் சிக்கினார்!
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 8:44:03 AM (IST)
சென்னை தரமணியில் மத்திய அரசு பணி தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக 2 ரயில்வே அதிகாரிகள், இந்தி ஆசிரியர் ஒருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை தரமணியில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மத்திய அரசு பணியில் 35 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை கடந்த 17.9.2023 அன்று நடத்தியது.
இந்த தேர்வை ஆள்மாறாட்டம் மூலம் எழுதி அரியானாவை சேர்ந்த காஜல், பீகாரை சேர்ந்த சகுன்குமார், உத்தரபிரதேசத்தை சேர்ந்த டிங்கு, பிரேம்சிங், அங்கித்குமார், ஜித்துயாதவ் ஆகிய 6 பேர் தேர்ச்சி பெற்று பணியாற்றி வருவதாகவும், அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரியும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ரமேஷ் கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி புகார் அளித்தார்.
இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி பணி ஆணை பெற்ற காஜல், சகுன்குமார் உள்பட 6 பேரும் அதிரடியாக கடந்த ஜூலை மாதம் 4-ந்தேதி கைது செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டு பெருந்தொகையை பெற்றுக் கொண்டு தேர்வு எழுதி கொடுத்த நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இறங்கினார்கள். அதன்படி இன்ஸ்பெக்டர்கள் சுமதி, கமல்மோகன், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. டெல்லி, பீகார் மற்றும் அரியானா மாநிலங்களுக்கு சென்று தனிப்படை போலீசார் முகாமிட்டு புலன் விசாரணையில் ஈடுபட்டனர்.
போலீசாரின் புலன் விசாரணையில், பீகாரை சேர்ந்த சகுன்குமாருக்கு ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது பீகாரை சேர்ந்த ஜெய்சங்கர் பிரசாத் (34) என்பதும், அவர் உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசி அருகே உள்ள சோப்பன் ரயில் நிலையத்தில் ஜூனியர் என்ஜினீயராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த டிங்குவுக்கு தேர்வு எழுதி கொடுத்தது அதே மாநிலத்தை சேர்ந்த அரவிந்த்குமார் (30) என்பதும், டெல்லி அருகே உள்ள புலந்த்ஷஹர் என்ற ரயில் நிலையத்தில் மூத்த கமர்ஷியல் மற்றும் ‘டிக்கெட்' சூப்பர்வைசராக பணிபுரிந்து வருவதும் கண்டறியப்பட்டது.
ஜித்துயாதவ்வின் பெயரில் தேர்வை எழுதியது உத்தரபிரதேசத்தை சேர்ந்த தர்மேந்தர் குமார் (32) என்பதும், இவர் அந்த மாநிலத்தில் உள்ள பிரைமரி பள்ளியில் இந்தி ஆசிரியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. சென்னை மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் 3 பேரையும் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
காஜல், பிரேம்சிங், அங்கித்குமார் ஆகியோருக்கு தேர்வு எழுதிய ஆள்மாறாட்ட நபர்களைகளை கண்டறிந்து கைது செய்வதற்கான புலன் விசாரணையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கடும் சவால்களுக்கு மத்தியில் குற்றவாளிகளை கைது செய்துள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசாரை கமிஷனர் அருண் பாராட்டி உள்ளார். இந்த மோசடி செயல் தொடர்பாக அவர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘அரசு பணிகளுக்கு தேர்வு எழுத உதவுவதாக கூறி தங்களை அணுகும் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். இந்த குற்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் : 6 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம்!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 5:36:49 PM (IST)

அஜித் படத்தின் படத்தில் அனுமதியின்றி பாடல் வழக்கு தொடர்ந்த இளையராஜா!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 4:24:54 PM (IST)

அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு - ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 4:08:04 PM (IST)

ரூ.237.46 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் 2.0 குடிநீர் திட்ட பணிகள் : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 3:42:39 PM (IST)

கல்லூரி வாழ்க்கை தான் எதிர்காலத்தை தீர்மானிக்கும் : மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 12:47:17 PM (IST)

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை இணைக்க 10 நாட்களில் முடிவெடுக்க வேண்டும்: செங்கோட்டையன் பேட்டி!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 11:59:59 AM (IST)

தமிழ்ச்செல்வன்Sep 1, 2025 - 11:04:21 AM | Posted IP 172.7*****