» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியாவின் டாப் ஆர்டர் சொதப்பல்; 3வது நாளில் ஆஸ்திரேலியா ஆதிக்கம்!
திங்கள் 16, டிசம்பர் 2024 3:34:33 PM (IST)
பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் ஆஸி.க்கு எதிரான 3 டெஸ்ட் போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலால் பாலோ ஆனை தவிர்க்க இந்திய அணி போராடி வருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 3-ஆவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள கப்பா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் அசத்தலான சதத்தால் வலுவான நிலையில் உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 32-ஆவது சதத்தை எட்டியிருக்கும் ஸ்மித், இந்தியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள் (10) விளாசியவா் என்ற பெருமையை பெற்று, இங்கிலாந்தின் ஜோ ரூட்டுடன் சமன் செய்திருக்கிறாா். முதல் செஷனில் அசத்திய இந்திய பௌலா்கள், பின்னா் தடுமாற்றத்தை சந்தித்தனா்.
இந்த நிலையில் 3ஆம் நாள் ஆட்டத்தை திங்கள்கிழமை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 445 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் முதல் இன்னிங்கிஸை தொடங்கிய இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. கேஎல் ராகுலை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.
இதையடுத்து 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்துள்ளது. கேஎல் ராகுல் 33 ரன்களுடன் களத்தில் உள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியை விட இந்தியா 394 ரன்கள் பின்தங்கியிருக்கிறது. எஞ்சிய 2 நாள்கள் மட்டும் உள்ள நிலையில் இந்திய அணி பாலோ ஆனை தவிர்த்தால் இப்போட்டி டிராவில் முடிய வாய்ப்புள்ளது. இல்லையெனில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.