» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: ஐ.சி.சி. அதிகாரபூர்வ அறிவிப்பு

வெள்ளி 20, டிசம்பர் 2024 7:57:07 PM (IST)

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தாலும் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று ஐ.சி.சி. அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடக்கிறது. 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் எந்த வித கிரிக்கெட் போட்டியிலும் ஆடாத இந்திய அணி, பாதுகாப்பு அச்சுறுத்தலால் அங்கு செல்ல மறுத்து விட்டது. 

அதற்கு பதிலாக தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை பொதுவான இடமான ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது. ஆனால் இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், போட்டி முழுமையாக பாகிஸ்தானில் தான் நடைபெறும். இங்கு பாதுகாப்பு பிரச்சினை எதுவும் இல்லை. எனவே வேறு நாட்டுக்கு மாற்றமாட்டோம் என்று கூறியது. இதனால் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை அட்டவணையை வெளியிடுவதில் தாமதம் ஆனது.

இதைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளிடம் பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்திய அணிக்குரிய ஆட்டங்களை மட்டும் வேறு நாட்டுக்கு மாற்றும் யோசனைக்கு உடன்படாவிட்டால், போட்டியை முழுமையாக வேறு நாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டியது வரும் அல்லது தள்ளிவைக்க வைக்க வேண்டிய சூழல் உருவாகும். இதனால் உங்களுக்கு தான் பெரும் இழப்பு ஏற்படும் என்று பாகிஸ்தானுக்கு ஐ.சி.சி. நிர்வாகிகள் அறிவுறுத்தினர்.

இந்த நிலையில் பிடிவாதத்தை விட்டு கொஞ்சம் இறங்கி வந்த பாகிஸ்தான், இந்திய அணி இங்கு வராவிட்டால் நாங்களும் அங்கு நடக்கும் போட்டிகளுக்கு செல்ல மாட்டோம். எங்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்று நிபந்தனை விதித்தது. இதனை ஐ.சி.சி.யும், இந்திய கிரிக்கெட் வாரியமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் சாம்பின்ஸ் கோப்பை போட்டி குறித்து ஒரு மாதமாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

ஐ.சி.சி. நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘2024-ம் ஆண்டில் இருந்து 2027-ம் ஆண்டு வரை இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடைபெறும் ஐ.சி.சி. தொடர்களில் போட்டியை நடத்தும் நாடு இந்தியாவாக இருந்தால் பாகிஸ்தானுக்குரிய ஆட்டங்களும்,, அதுவே பாகிஸ்தானாக இருந்தால் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் பொதுவான இடத்துக்கு மாற்றப்படும். பொதுவான இடம் எது என்பதை போட்டியை நடத்தும் நாடு பரிந்துரைக்கும். இந்த முடிவுக்கு ஐ.சி.சி.யின் போர்டு ஒப்புதல் அளித்துள்ளது. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பார்த்தால் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் 10 ஆட்டங்கள் பாகிஸ்தானிலும் 5 ஆட்டங்கள் துபாய் அல்லது சார்ஜாவிலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த உலகக் கோப்பையிலும்...

8 அணிகள் இடையிலான 13-வது பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அடுத்த ஆண்டு (2025) இந்தியாவில் நடக்கிறது. இதே போல் 10-வது ஆண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை 2026-ம் ஆண்டில் இந்தியா, இலங்கை இணைந்து நடத்துகிறது. இவ்விரு உலக போட்டிக்கும் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்து விளையாடாது. அதற்கு பதிலாக அவர்களுக்குரிய ஆட்டங்கள் அண்டை நாட்டில் நடத்த ஏற்பாடு செய்யப்படும். 2028-ம் ஆண்டு பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிலும் இதே நடைமுறை பின்பற்றப்படும் என்று தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory