» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தென் ஆப்ரிக்கா அணி தகுதி
திங்கள் 30, டிசம்பர் 2024 11:39:52 AM (IST)
பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, செஞ்சுரியன் நகரில் நடந்த முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 211 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. பின் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 301 ரன் எடுத்தது. பின்னர், 2ம் இன்னிங்சை ஆடிய பாக். 3ம் நாள் ஆட்டத்தின்போது, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன் எடுத்தது.
இதையடுத்து, 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா 2வது இன்னிங்சை தொடங்கியது. 3ம் நாள் ஆட்ட முடிவில் அந்த அணி, 3 விக்கெட் இழப்புக்கு 27 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில் 4ம் நாளான நேற்று தென் ஆப்ரிக்கா 8 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்து, சிரமப்பட்டு வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியை அடுத்து, வரும் 2025 ஜூனில் லண்டனில் நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யுடிசி) இறுதிப் போட்டியில் ஆட, முதல் அணியாக தென் ஆப்ரிக்கா தகுதி பெற்றுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையில் நடந்து வரும் போட்டிகளின் முடிவுகள் மற்றும் ஆஸி – இலங்கையுடனான 2 டெஸ்ட் போட்டிகளின் முடிவுகள் அடிப்படையில் தென் ஆப்ரிக்காவுடன் இறுதிப் போட்டியில் மோதுவது இந்தியாவா அல்லது ஆஸியா என்பது முடிவாகும்.