» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி
வெள்ளி 21, பிப்ரவரி 2025 8:28:47 AM (IST)

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றியோடு தொடங்கியது. சுப்மன் கில் சதமும், முகமது ஷமி 5 விக்கெட்டும் எடுத்து அசத்தினர்.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேச அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்த நிலையில் துபாயில் நேற்று நடந்த 2-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய வங்கதேசத்துக்கு தொடக்கத்திலேயே பேரிடி விழுந்தது. வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வீசிய முதல் ஓவரிலேயே தொடக்க வீரர் சவுமியா சர்கார் (0) விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய கேப்டன் ஷன்டோ (0), மெஹிதி ஹசன் மிராஸ் (5 ரன்), மற்றொரு தொடக்க வீரர் தன்சித் ஹசன் (25 ரன்), விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் (0) ஆகியோர் விக்கெட் அணிவகுப்பு நடத்தினர்.
அப்போது வங்கதேசம் 35 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாபகரமான நிலைமையில் பரிதவித்தது. இதனால் அந்த அணியினர் 100 ரன்களுக்குள் அடங்கி விடுவார்கள் என்பதே பெரும்பாலானவர்களின் கணிப்பு. ஆனால் பந்து வீச்சில் இறுக்கிய இந்தியா பீல்டிங்கில் கோட்டை விட்டது.
6-வது விக்கெட்டுக்கு தவ்ஹித் ஹிரிடாயும், ஜேக்கர் அலியும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்க நிதானமாக ஆடினர். அவர்களுக்கு அதிர்ஷ்டமும் துணை நின்றது. ஜேக்கர் அலிக்கு ரன் கணக்கை தொடங்கும் முன்பு ரோகித் சர்மா கேட்ச்சை நழுவ விட்டார். 24 ரன்னில் லோகேஷ் ராகுல் ஸ்டம்பிங் வாய்ப்பை வீணடித்தார். ஹிரிடாய்க்கு 23 ரன்னில், மிக எளிதான கேட்ச்சை ஹர்திக் பாண்ட்யா நழுவ விட்டார். இது அவர்கள் சரிவில் இருந்து மீள வழிவகுத்தது.
அழுத்தமாக காலூன்றிய பிறகு அவர்கள் வேகமாக ரன் திரட்டுவதில் கவனம் செலுத்தினர். குல்தீப், ஜடேஜா ஓவர்களில் ஹிரிடாய் சிக்சர்களை பறக்க விட்டார். ஒரு வழியாக இந்த கூட்டணியை ஸ்கோர் 189-ஐ எட்டிய போது முகமது ஷமி உடைத்தார். ஜேக்கர் அலி 68 ரன்னில் (114 பந்து, 4 பவுண்டரி) கேட்ச் ஆனார். இவர்கள் 6-வது விக்கெட்டுக்கு 154 ரன்கள் (205 பந்து) திரட்டினர். சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் 6-வது விக்கெட்டுக்கு ஒரு ஜோடியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மேலும் இந்தியாவுக்கு எதிராக வங்கதேச ஜோடியின் சிறந்த பார்ட்னர்ஷிப்பாகவும் இது அமைந்தது.
அடுத்து வந்த வீரர்கள் வேகமாக வெளியேறினாலும், இன்னொரு பக்கம் தொடர்ந்து போராடிய ஹிரிடாய் 49-வது ஓவரில் தனது முதலாவது சதத்தை ருசித்தார். ஹிரிடாய் கடைசி விக்கெட்டாக 100 ரன்னில் (118 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழந்தார். வங்கதேச அணி 49.4 ஓவர்களில் 228 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இந்தியா தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அவர் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் எடுப்பது 6-வது முறையாகும்.
பின்னர் 229 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மாவும், துணை கேப்டன் சுப்மன் கில்லும் 69 ரன்கள் சேர்த்து அருமையான தொடக்கம் தந்தனர். ரோகித் சர்மா 41 ரன்னில் (36 பந்து, 7 பவுண்டரி) கேட்ச் ஆனார். அடுத்து வந்த விராட் கோலி (22 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர் (15 ரன்), அக்ஷர் பட்டேல் (8 ரன்) குறிப்பிட்ட இடைவெளியில் பெவிலியன் திரும்பினர். இதற்கு மத்தியில் சுப்மன் கில் தன்னை வலுவாக நிலைநிறுத்தி வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தார். கலக்கலாக ஆடிய சுப்மன் கில் தனது 8-வது சதத்தை பூர்த்தி செய்தார்.
இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 231 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுப்மன் கில் 101 ரன்னுடனும் (129 பந்து, 9 பவுண்டரி, சிக்சர்), லோகேஷ் ராகுல் 41 ரன்னுடனும் (47 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இதே மைதானத்தில் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
‘ஹாட்ரிக்’ வாய்ப்பை இழந்த அக்ஷர்
இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல், ஆட்டத்தின் 9-வது ஓவரில் 2-வது, 3-வது பந்துகளில் தன்சித் ஹசன், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோரின் விக்கெட்டுகளை தொடர்ச்சியாக கபளீகரம் செய்தார். 4-வது பந்திலும் அவருக்கு விக்கெட் கிடைத்திருக்க வேண்டியது. இதை எதிர்கொண்ட ஜேக்கர் அலியின் பேட்டில் பந்து பட்டு ஸ்லிப்பில் நின்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் சென்றது.
லட்டு போன்ற சுலபமான அந்தகேட்ச்சை ரோகித் சர்மா பிடிக்க தவறினார். கேட்ச்சை நழுவ விட்ட விரக்தியில் ரோகித் சர்மா மைதானத்தில் கையால் பலமுறை ஓங்கி குத்தி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். 2023-ம் ஆண்டில் இருந்து ரோகித் சர்மா இதுவரை 10 கேட்ச்சுகளை கோட்டை விட்டிருப்பது குறிப்பிடத்தக் கது. ரோகித் சர்மாவின் தவறினால் அக்ஷர் பட்டேலுக்கு அரிதான ‘ஹாட்ரிக்’ சாதனை நழுவிப்போனது. சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியர்கள் யாரும் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதில்லை.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாய் சுதர்சன், பட்லர் அசத்தல் : ஆர்சிபியை வீழத்திய குஜராத்!
வியாழன் 3, ஏப்ரல் 2025 11:42:37 AM (IST)

தோனியால் தொடர்ந்து 10 ஓவர்கள் நின்று பேட்டிங் செய்வது முடியாது: பிளெமிங் விளக்கம்
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 12:01:44 PM (IST)

அறிமுகப் போட்டியில் அசத்திய இளம் வீரர் அஸ்வனி குமார்: கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 10:28:08 AM (IST)

பிரசித் கிருஷ்ணா, ஷுப்மன் கில் - சாய் சுதர்சன் அசத்தல் : மும்பை அணியை வீழ்த்தியது குஜராத்!
ஞாயிறு 30, மார்ச் 2025 11:42:44 AM (IST)

ராம நவமி: ஐபிஎல் அட்டவணையில் திடீர் மாற்றம்
சனி 29, மார்ச் 2025 10:40:38 AM (IST)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய ஆர்சிபி: 17 வருடங்களுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் வெற்றி!
சனி 29, மார்ச் 2025 10:32:03 AM (IST)
