» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
352 ரன்கள் குவித்தும் தோற்றது வேதனை அளிக்கிறது : இங்கிலாந்து கேப்டன் பட்லர் பேட்டி
ஞாயிறு 23, பிப்ரவரி 2025 9:06:52 PM (IST)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 352 ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவியது வேதனை அளிப்பதாக இங்கிலாந்து கேப்டன் பட்லர் கூறியுள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று லாகூரில் நடந்த லீக்கில் பென் டக்கெட்டின் (165 ரன்) சதத்தின் உதவியுடன் இங்கிலாந்து நிர்ணயித்த 352 ரன் இலக்கை ஆஸ்திரேலிய அணி 47.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோஸ் இங்லிஸ் 120 ரன்களும் (86 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்), அலெக்ஸ் கேரி 69 ரன்களும் விளாசினர். இதன் மூலம் 50 ஓவர் ஐ.சி.சி. போட்டி ஒன்றில் 350 ரன்களுக்கு மேலான இலக்கை விரட்டிப்பிடித்த முதல் அணி என்ற வரலாற்று சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது.
தோல்விக்கு பிறகு இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் கூறுகையில், ‘இது ஒரு அற்புதமான ஆட்டம். இரு அணியினரும் சிறப்பாக ஆடினர். ஆனால் இவ்வளவு பெரிய ஸ்கோரை ‘சேசிங்’ செய்த ஆஸ்திரேலியாவை பாராட்டியாக வேண்டும். இங்லிஸ் அருமையான ஒரு இன்னிங்சை வெளிப்படுத்தினார். எங்களால் அந்த பார்ட்னர்ஷிப்பை (இங்லிஸ்- கேரி) சீக்கிரம் உடைக்க முடியாமல் போய் விட்டது. 352 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர். ஆனால் பனியின் தாக்கம் ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டது.
பென் டக்கெட் பிரமாதமாக விளையாடினார். 165 ரன்கள் சேர்த்தும் தோல்வியில் முடிந்தது வேதனை அளிக்கிறது. அவரது பேட்டிங் பெரிய ஸ்கோர் குவிப்புக்கு கச்சிதமாக இருக்கிறது. இந்த தொடருக்கு முன்பாக நான் பேசும் போது, ஒரு நாள் போட்டியில் இரட்டை சதத்தை எட்டும் முதல் இங்கிலாந்து வீரராக அவர் இருக்கக்கூடும் என்று சொல்லியிருந்தேன். இது போன்ற இன்னிங்ஸ் மூலம் தொடர்ச்சியாக எப்படி ரன் குவிப்பது என்பதை நிரூபித்துள்ளார். இது இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு பெரிய ஆண்டாக இருக்கப்போகிறது. நீங்கள் (ரசிகர்கள்) தொடர்ந்து அவரது பேட்டிங்கை பார்த்து குதூகலமடைவீர்கள்’ என்றார்.
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறுகையில், ‘ஒரு கட்டத்தில் அவர்கள் 400 ரன்களை நெருங்குவார்கள் போல் தோன்றியது. பந்து வீச்சில் சில மாற்றங்கள் செய்து கொஞ்சம் கட்டுப்படுத்தினோம். இங்குள்ள சூழலில் 350 ரன் என்பது விரட்டிப்பிடிக்க கூடிய இலக்கு தான் என்று நினைத்தோம். அதற்கு ஏற்ப இரண்டு விக்கெட் கீப்பர்கள் (இங்லிஸ், கேரி) நேர்த்தியான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெற்றியை தேடித்தந்தனர். இங்லிஸ் மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை தெறிக்க விட்டார்.
ஜோஷ் இங்லிஸ் இன்னும் இங்கிலாந்தின் பாஸ்போர்ட்டை வைத்திருக்கிறாரா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர் இங்கிருந்து (ஆஸ்திரேலிய அணி) எங்கும் செல்லமாட்டார்’ என்றார். இங்கிலாந்தை பதம் பார்த்த 29 வயதான ஜோஷ் இங்லிஸ் இங்கிலாந்தில் உள்ள லீட்சில் பிறந்தவர் ஆவார். 15 வயதில் அவரது குடும்பம் ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாய் சுதர்சன், பட்லர் அசத்தல் : ஆர்சிபியை வீழத்திய குஜராத்!
வியாழன் 3, ஏப்ரல் 2025 11:42:37 AM (IST)

தோனியால் தொடர்ந்து 10 ஓவர்கள் நின்று பேட்டிங் செய்வது முடியாது: பிளெமிங் விளக்கம்
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 12:01:44 PM (IST)

அறிமுகப் போட்டியில் அசத்திய இளம் வீரர் அஸ்வனி குமார்: கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 10:28:08 AM (IST)

பிரசித் கிருஷ்ணா, ஷுப்மன் கில் - சாய் சுதர்சன் அசத்தல் : மும்பை அணியை வீழ்த்தியது குஜராத்!
ஞாயிறு 30, மார்ச் 2025 11:42:44 AM (IST)

ராம நவமி: ஐபிஎல் அட்டவணையில் திடீர் மாற்றம்
சனி 29, மார்ச் 2025 10:40:38 AM (IST)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய ஆர்சிபி: 17 வருடங்களுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் வெற்றி!
சனி 29, மார்ச் 2025 10:32:03 AM (IST)
