» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
காட்டு யானை மிதித்து காவலாளி பரிதாப சாவு: பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
ஞாயிறு 14, ஜூலை 2024 8:54:41 AM (IST)
தென்காசி அருகே காட்டு யானை மிதித்து காவலாளி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி வலையர் குடியிருப்பு கண்ணப்பர் தெருவை சேர்ந்த குருநாதன் என்பவரது மகன் மூக்கையா (60). இவர் அதே பகுதியை சேர்ந்த பிள்ளையார் பாண்டியன் என்பவரின் தோட்டத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இரவு மூக்கையா வழக்கம் போல் அந்த தோட்டத்தில் காவல் வேலை செய்து வந்தார்.நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென அப்பகுதிக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று மூக்கையாவை காலால் மிதித்து தாக்கியுள்ளது.
இதில் மூக்கையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் வனச்சரக அலுவலர் சுரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று மூக்கையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் யானை தாக்கி உயிரிழந்த மூக்கையாவின் இறப்புக்கு நீதி கேட்டு மூக்கையாவின் உறவினர்கள் மற்றும் சொக்கம்பட்டி பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன், வனத்துறை அலுவலர் சுரேஷ், மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
காட்டு யானை தாக்கி மிதித்ததில் பலியான மூக்கையாவிற்கு பெருமாத்தாள் என்ற மனைவியும், ராக்கம்மாள், குருவம்மாள், ராமலட்சுமி என்ற மூன்று மகள்களும் உள்ளனர். காட்டு யானை தாக்கி தோட்ட கவலாளி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.