» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் காலை உணவுத் திட்டம்: 17,881 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள்!
திங்கள் 15, ஜூலை 2024 8:51:51 PM (IST)
திருநெல்வேலி மாவட்ட ஊரக பகுதிகளில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கல்வி வளர்ச்சி நாளில் ஊரக பகுதிகளில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் திருவள்ளுர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கீழச்சேரி அரசு உதவிபெறும் புதிய அன்னாள் தொடக்கப்பள்ளியில் இன்று (15.07.2024) தொடங்கி வைத்ததை அடுத்து, திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளம் காமராஜ் நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், தலைமையில், மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் முன்னிலையில் ஊரக பகுதிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 16.09.2022 அன்று முதல் திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதற்கட்டமாக 40 தொடக்கப்பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 2496 பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர். முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட ஊரகப் பகுதிகளில் செயல்படும் 286 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 13388 மாணவர்களும், பேரூராட்சி பகுதிகளில் செயல்படும் 43 அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் 2894 மாணவர்களும், நகர்புற பகுதிகளில் செயல்படும் 19 பள்ளிகளில் பயிலும் 1162 மாணவர்கள் என மொத்தம் 348 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 17444 மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
தெற்கு கள்ளிக்குளம் காமராஜ் நடுநிலைப்பள்ளியில், பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் ஆகியோர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
காலை உணவு குழந்தைகளின் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிப்பதோடு, இரவு உணவுக்குப் பின் ஏற்படும் நீண்ட இடைவெளியுடன் கூடிய பசியை தணிப்பதாக அமைகிறது. மேலும், காலை உணவினைத் தவிர்க்கும் நிலையிலுள்ள குழந்தைகள் மிகுந்த சோர்வுடனும், கவனிப்புத் திறன் குறைந்தும். கவனச்சிதறலுடன் காணப்படுவர் என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. காலை உணவு சாப்பிடாமல் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் படிப்பில் கவனத்தைச் செலுத்த இயலாமல் சோர்வடைந்து விடுகின்றனர்.
இதனைப் போக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் 07.05.2022 அன்று முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டதுடன், 15.09.2022 அன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில் மதுரையில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.
அதனைத்தொடர்ந்து, முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரகப் பகுதி மற்றும் பேருராட்சி, நகர்புற பகுதிகளில் உள்ள 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 31,008 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 15.75 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தினை 25.08.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் தொடக்கப்பள்ளியில் விரிவாக்கம் செய்து, தொடங்கி வைத்தார்கள்.
இத்திட்டத்தின் மூலம் இன்றையதினம் திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களில் உள்ள ஊரகப் பகுதிகளில் செயல்பட்டு வரும் 416 அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 17,881 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள்.
முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று வரை 804 பள்ளிகளில் 37,821 மாணவர்கள் பயனடைகின்றனர். இந்த காலை உணவு வழங்கும் பணியினை பிரத்யோகமாக அரசு மூலம் வழங்கப்பட்ட மொபைல் ஆப் மூலம் தினமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. உணவு சரியான நேரத்தில் வழங்கப்படுகிறதா, உணவு உட்கொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்தும் மொபைல் ஆப் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.சுரேஷ், மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் இலக்குவன், இராதாபுரம் வட்டாட்சியர் கிருஷ்ணகுமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜான்ஸ் ரூபா, தாளாளர்கள் அருட்பணி ததேயுஸ் ராஜன் (ஆர்.சி பள்ளி), ஜெபஸ்டின் ஆனந்த் (காமராஜ் பள்ளி), தலைமை ஆசிரியர் லியோன்ஸ் லெற்றீஷியா தங்கம், முக்கிய பிரமுகர் ஜோசப் பெல்சி, உட்பட ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.