» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஒண்டிவீரன் நினைவு தினம்: சிலைக்கு மாலை அணிவித்து கனிமொழி எம்பி மரியாதை!

செவ்வாய் 20, ஆகஸ்ட் 2024 12:46:12 PM (IST)



விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 253 -வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில், அன்னாரது திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருநெல்வேலி மாவட்டம், விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 253-வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாரது திருவுருவச்சிலைக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, வனத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், ஆகியோர் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று நடைபெறும் ஒண்டிவீரன் நினைவு நாளில் விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

வெள்ளையரை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதிகளில் ஒருவராக சுந்தரலிங்கம் இறுதியில் தன்னையே மாயத்துக் கொண்ட வராலாறு ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முன்பே நெல்லை சீமையின் நெற்கட்டும் செவல் பாளையத்தில் மாவீரன் பூலிதேவன் வெள்ளையரை எதிர்த்து போரிட்டார். வெள்ளையருக்கு எதிரான பல போர்களில் மாமன்னர் பூலிதேவனுக்கு முதன்மை படைத்தலைவராக இருந்தவர் மாவீரர் ஒண்டிவீரன் என்பவர் ஆவார்.

ஆங்கிலேய படைகளை தனியாக சென்று அழித்தார். ஒண்டியாக சென்று எதிரிகளை கொன்றதால் ஒண்டிவீரன் என அழைக்கப்பட்டார். இவர் பல போர்களில் வெற்றி கண்டுள்ளார். முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் பொற்கால ஆட்சியில் 2010ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களுக்கு நினைவு சின்னம் அமைக்கப்படும் என்று அரசு ஆணை வெளியிட்டு நிதி ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 18.01.2011 அன்று மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த மணிமண்டப வளாகத்தில் ரூ.51.78 இலட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் 08.09.2022 அன்று திறந்து வைத்தார்கள்.

சுதந்திர போராட்ட காலங்களில் பல சுதந்திர போராட்ட வீரர்கள் இங்கு உருவாகியுள்ளார்கள். இந்த மண் வீரம் நிறைந்த மண். அவர்களுடைய சரித்திரம் எல்லாம் சுதந்திர போராட்ட வரலாற்றில் மறைக்கபடமால் இருப்பதற்காக முத்தமிழறிஞர் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகளுக்கு நினைவு சின்னங்கள் உருவாக்கி சுதந்திர போராட்டங்களில் தமிழர்களாற்றிய பங்கினை எடுத்துகாட்டும் விதமாக அவர்களுக்கு மணிமண்டபங்கள், நினைவு சின்னங்கள் எழுப்பி, பெருமை சேர்த்துள்ளார்கள்.

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நல்வழியில் செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட வீரர்கள், தியாகிகள், தமிழறிஞர்கள் போன்றோர்களை வருங்கால இளம் சந்ததியினர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அவர்களின் புகழ் பரப்புவதில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் தான் அருந்ததியினர்களுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. சில நபர்களால் இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சியில் தற்போது மீண்டும் இட ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளதோடு, ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்பு நிலையிலுள்ள அனைத்து மக்களையும் அரவணைத்து, ஒன்றிணைத்து செல்லும் அரசாக திகழ்ந்து வருகிறது. அவர்களுக்கு சமூக நீதி கிடைக்க வேண்டுமென்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியிலே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்படும் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.

மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வஹாப், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி.ஆர்.மனோகரன், மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத் தலைவர் விஜிலா சத்யானந்த், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி, பாளையங்கோட்டை வட்டாட்சியர் சரவணன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ம.ச.மகாகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் கனகராஜ், மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory