» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் தொழிலதிபர் வீட்டில் ரூ.1½ கோடி தங்க நாணயங்கள் திருட்டு: பணிப்பெண் கைது!
ஞாயிறு 12, ஜனவரி 2025 9:49:43 AM (IST)
நெல்லையில் தொழிலதிபர் வீட்டில் ரூ.1½ கோடி தங்க நாணயங்களை திருடிய வழக்கில் பணிப்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை பாளையங்கோட்டை வடக்கு ஐகிரவுண்டு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சன் (42). தொழில் அதிபரான இவர் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகளும், நெல்லையில் பல்வேறு தொழில் நிறுவனங்களும் நடத்தி வருகிறார். இவர் தொழில் நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம். இதனால் வீட்டில் இருக்கும் அவரது குடும்பத்தினரை கவனித்து கொள்ளவும், வீட்டு வேலைகள் செய்யவும் பணிப்பெண்கள் உள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் ரஞ்சன் வீட்டு பீரோவில் இருந்த சுமார் ரூ.1½ கோடி மதிப்பிலான 2¼ கிலோ தங்க நாணயங்கள் திருட்டு போனது. இதை அறிந்த அவர் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்தனர். பாளையங்கோட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கீதா அன்பு ஜூலியட் விசாரணை நடத்தினார். மேலும் ரஞ்சன் வீட்டில் வேலை பார்த்த சமையல் செய்யும் பெண்கள், தோட்டக்காரர்கள், டிரைவர்கள், முன்னாள் ஊழியர்கள் என சுமார் 20-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, ரஞ்சன் வீட்டில் கடந்த 8 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த பாளையங்கோட்டையை சேர்ந்த பெண் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக அந்த பெண்ணின் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்தனர். அப்போது தங்க நாணயம் திருட்டில் அவருக்கு தொடர்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அந்த பெண்ணை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் அந்த பெண், ரஞ்சன் வீட்டை சுத்தம் செய்யும் போதெல்லாம் சிறுக, சிறுக தங்க நாணயங்களை திருடிச் சென்றுள்ளார். அந்த நாணயங்களை விற்ற பணத்தின் மூலமாக அந்த பெண் சொகுசு வீடு ஒன்றை கட்டியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. இந்த திருட்டு சம்பவத்தில் மேலும் 3 பேர் அந்த பெண்ணுக்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள்?, என்னென்ன பொருட்கள் வாங்கியுள்ளார்கள் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து நகைகளை மீட்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.