» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உயிரிழப்பு : பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி
திங்கள் 13, ஜனவரி 2025 8:28:57 AM (IST)
மூட்டு வலியால் அவதிப்பட்ட நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி நேற்று உயிரிழந்தது. பக்தர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் 56 வயதுடைய காந்திமதி என்ற பெண் யானை உண்டு. இந்த யானை கடந்த 1985-ம் ஆண்டு கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
வயது முதிர்வு காரணமாக யானைக்கு கால்களில் மூட்டு வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தது. கடந்த 2020-ம் ஆண்டு முதல் யானைக்கு கால்நடை மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த சில நாட்களாக மூட்டுவலி அதிகமானதால் யானையால் கீழே படுக்க முடியாமல் நின்றுக்கொண்டே தூங்கியது. நேற்று முன்தினம் அதிகாலையில் யானை திடீரென கீழே படுத்தது. அதன் பின்னர் எழுந்து நிற்க முடியவில்லை. இதனையடுத்து பாகன்கள் கோவில் நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக நெல்லை ஸ்ரீபுரம் கால்நடை மருத்துவமனை தலைமை மருத்துவர் முருகன், கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் செல்வசூடாமணி உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் யானையை வந்து பார்வையிட்டனர்.
அதன் பின்னர் கிரேன் மூலம் யானை உடலில் பெல்ட் போட்டு தூக்கி நிறுத்தினர். சிறிது நேரத்தில் யானை கீேழ படுத்தது. தொடர்ந்து யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் நேற்று காலை 7.20 மணிக்கு யானை காந்திமதி பரிதாபமாக உயிரிழந்தது. அதன் உடலை பார்த்து பாகன்கள் கதறி துடித்தனர்.
இதுபற்றி அறிந்த ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கோவிலில் திரண்டனர். அவர்கள் யானைக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் யானையை குளிப்பாட்டி மாலை, பட்டாடை அணிவித்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து கிரேன் மூலம் யானை உடலில் பெல்ட்டால் கட்டி லாரியில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் யானையின் உடல் நெல்லை டவுன் ஆர்ச் அருகில் கோவிலுக்கு சொந்தமான தாமரை குளம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பக்தர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நெல்லை மக்களின் செல்ல பிள்ளையாக வலம் வந்த காந்திமதி யானைக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.
இதற்கிடையே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நெல்லை வந்த அமைச்சர் கே.என்.நேரு யானை இறந்த செய்திகேட்டு தாமரைகுளம் பகுதிக்கு விரைந்து வந்தார். அவர் காந்திமதி யானைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதேபோல் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், எம்.எல்.ஏ.க்கள் அப்துல்வகாப், நயினார் நாகேந்திரன், மேயர் ராமகிருஷ்ணன், ஆணையாளர் சுகபுத்ரா, துணை மேயர் கே.ஆர்.ராஜூ உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு மேல் அந்த பகுதியிலேேய குழிதோண்டி யானை அடக்கம் செய்யப்பட்டது. காந்திமதி யானை நேற்று உயிரிழந்ததை தொடர்ந்து காலை நித்திய பூஜைக்கு பின்னர் நெல்லையப்பர் கோவில் நடை அடைக்கப்பட்டது. யானைக்கு இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளும் பணிகள் நடந்ததால் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டது. பரிகார பூஜைகளுக்கு பின்னர் நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.