» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் வக்கீல் கொலையில் 8 பேர் கைது - மறியலில் ஈடுபட்ட வக்கீல்களால் பரபரப்பு!

வியாழன் 22, ஆகஸ்ட் 2024 10:31:18 AM (IST)



நெல்லையில் வக்கீல் கொலையில் 8 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிலரை தேடி வருகிறார்கள்.

சென்னையில் தொழில் செய்து வரும் ஜோன்ஸ் என்பவர், நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் நிலம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அதே பகுதியை சேர்ந்த சிலர் அங்கு தங்களுக்கு இடம் உள்ளதாக கூறி வந்ததால், நிலம் தொடர்பான பிரச்சினை இருந்து வந்தது.

நேற்று முன்தினம் அந்த இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் நிலத்தை சமன் செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியை ஜோன்ஸ் வக்கீல்களான தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்த சரவணராஜ் (வயது 45), நெல்லை மாவட்டம் உக்கிரன்கோட்டையை சேர்ந்த சாம்லாபின் (28) ஆகியோர் கண்காணித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த சிலர், எங்கள் இடத்தில் எங்களிடம் கேட்காமல் எப்படி வேலை பார்க்கலாம் என்று கூறி தகராறு செய்தனர். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் சரவணராஜ், சாம்லாபின் ஆகியோரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் சரவணராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

வக்கீல் சரவணராஜ் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நெல்லையில் வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் எதிரே திருச்செந்தூர் சாலையில் நெல்லை வக்கீல்கள் சங்கம் சார்பில் ஏராளமான வக்கீல்கள் திரண்டு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் நெல்லை வக்கீல் சங்க தலைவர் ராஜேஷ்வரன், செயலாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு, கொலை சம்பவத்தில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் வக்கீல்கள் அனைவரும் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும். கொலை செய்யப்பட்ட சரவணராஜ் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.1 கோடி வழங்க வேண்டும். அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அவர்களிடம் நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் கீதா, உதவி கமிஷனர் பிரதீப் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி இதில் ஒரு முடிவு எடுக்கப்பட்டால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக நெல்லையில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து பாளையங்கோட்டை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சாலை வழியாக போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. மேலும் பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் இருந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ஐகிரவுண்டு வழியாகவும் திருப்பிவிடப்பட்டன.

இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டை தாசில்தார் சரவணன் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். இதையடுத்து வக்கீல்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்ந்து போலீசார், சரவணராஜ் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து விடுவோம் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் சரவணராஜ் உடலை வாங்கிச் சென்றனர்.

இதற்கிடையே கொலையாளிகளை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா உத்தரவின் பேரில், துணை கமிஷனர் கீதா நேரடி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று கொலையாளிகளை தேடி வந்தனர்.

இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் இந்த கொலை சம்பந்தமாக 8 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிலரை தேடி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory