» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலம் அருவியில் கற்கள் விழுந்து 5 சுற்றுலா பயணிகள் படுகாயம்!
வியாழன் 22, ஆகஸ்ட் 2024 10:35:07 AM (IST)
குற்றாலம் மெயின் அருவியில் நேற்று திடீரென கற்கள் விழுந்ததால் 5 சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. நேற்று மேகமூட்டமாக காணப்பட்டது. வெயிலும் அடித்தது. சாரல் மழை பெய்யவில்லை. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததால் அருவிகளில் நீர்வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் சுமாராக இருந்தது.
குற்றாலம் மெயின் அருவியில் நேற்று மாலை சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அருவியில் திடீரென சிறு சிறு கற்கள் விழுந்தன. இதனால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த கேரள மாநிலம் புனலூரைச் சேர்ந்த ஜமால், பிஜூ, தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த உதுமான் மைதீன், தென்காசியை சேர்ந்த அருண்குமார், அறந்தாங்கியைச் சேர்ந்த கணேசன் ஆகிய 5 சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து குற்றாலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குற்றாலம் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் மீது திடீரென கற்கள் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.