» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை அருகே மாரடைப்பால் மகன் சாவு; அதிர்ச்சியில் தாய்-சகோதரி தற்கொலை!
வியாழன் 22, ஆகஸ்ட் 2024 11:01:21 AM (IST)
நெல்லை அருகே மகன் மாரடைப்பால் இறந்ததால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய்-சகோதரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம், தாழையூத்து அருகேயுள்ள தென்கலம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (42). தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனா். கிருஷ்ணனின் தாய் பகவதி என்ற மூக்கம்மாள் (75), சகோதரி மாலா (32) ஆகியோா் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தனா். திருமணத்திற்கு பின்பு ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மாலா தனது தாயாருடன் வசித்து வந்தாா். அவா்கள் இருவருக்கும் கிருஷ்ணன் உதவிகள் செய்து வந்தாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கிருஷ்ணன் உயிரிழந்தாா். இதுகுறித்த தகவலறிந்ததும் மூக்கம்மாளும், மாலாவும் நேரில் வந்து கிருஷ்ணன் உடலைப் பாா்த்து அழுதுள்ளனா். அதன்பின்பு தங்களது வீட்டிற்கு சென்ற இருவரும் மீண்டும் வரவில்லையாம். நேற்று காலையில் உறவினா்கள் பகவதியின் வீட்டிற்கு சென்று பாா்த்துள்ளனா். அப்போது தாய், மகள் இருவரும் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்ததாம்.
இதுபற்றி தாழையூத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்து கொண்ட பகவதி, மாலா உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து 2 பேரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
கிருஷ்ணன் இறந்த பின்னர் நம்மை யார் கவனித்து கொள்வார் என்று கருதி 2 பேரும் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். எனினும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நெல்லை அருகே ஒரே நாளில் ஒரே குடும்பத்தில் 3 பேர் அடுத்தடுத்து இறந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.