» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
லாரி உரிமையாளர் குத்திக்கொலை: சம்பள பாக்கி தகராறில் டிரைவர் வெறிச்செயல்
சனி 24, ஆகஸ்ட் 2024 8:51:43 AM (IST)
வள்ளியூரில் சம்பள பாக்கி தகராறில் லாரி உரிமையாளரை சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பெரியமுருகன் (வயது 45). இவர் கடந்த 10 ஆண்டுகளாக நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்டிகைப்பேரியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கு சொந்தமாக 2 லாரிகள் வைத்து தொழில் செய்து வந்தார். அவரிடம் வள்ளியூர் நம்பியான்விளை பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் (25) என்பவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வசந்தகுமார் வள்ளியூர் பெரியகுளம் பகுதிக்கு பெரியமுருகனை வரவழைத்துள்ளார். அங்கு இருவரும் குளத்தின் மடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த வசந்தகுமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெரியமுருகனை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பெரிய முருகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் வள்ளியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்றனர். பெரியமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவம் குறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வசந்தகுமாரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், டிரைவர் வசந்தகுமாருக்கு பெரிய முருகன் சரியாக சம்பளம் கொடுப்பதில்லை என கூறப்படுகிறது. இதனால் வசந்தகுமார் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நின்றுவிட்டார். எனவே, வசந்தகுமார் சம்பள பாக்கியை கேட்டதால் தகராறு ஏற்பட்டு அதன் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.