» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1¼ கோடி அடகு நகை கொள்ளை : போலீஸ் விசாரணை!

சனி 24, ஆகஸ்ட் 2024 12:25:35 PM (IST)

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1¼ கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த மூலக்கரைபட்டியை சேர்ந்தவர் வின்சென்ட் மகன் ரெமன் (வயது 45). இவர் மூலக்கரைப்பட்டி மெயின் பஜாரில் வணிக வளாகம் வைத்துள்ளார். இந்த வணிக வளாகத்தில் அவர் தனியார் நிதி நிறுவனம் மற்றும் ஜவுளிக்கடை, பேன்சி கடைகள் நடத்தி வருகிறார்.

நேற்று இரவு கடை ஊழியர்கள் கடைகளை அடைத்து சென்றனர். இன்று காலை வணிக வளாகத்தில் உள்ள நிதி நிறுவனத்தில் பின்பக்க ஜன்னல் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ரெமனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர் உடனடியாக வணிக வளாகத்துக்கு விரைந்து சென்றார்.

அங்கு வணிக வளாகத்தில் உள்ள நிதி நிறுவனத்தின் பின்பக்க ஜன்னல் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்திருப்பது தெரிய வந்தது. மேலும் இந்த நிதி நிறுவனத்தில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் தங்களது நகைகளை அடகு வைத்து கடன் பெற்றிருந்தனர்.

இதுதொடர்பாக அங்கிருந்த ஆவணங்களை ஆய்வு செய்த போது சுமார் 250 பவுன் நகைகள் வரை அடகு வைக்கப்பட்டிருந்ததும், அவை கொள்ளை போயிருந்ததும் தெரிய வந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1¼ கோடி ஆகும். மேலும் நிதி நிறுவனத்தில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்க பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து ரெமன் மூலக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரசன்ன குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் நிதி நிறுவனத்தின் பின்பக்க ஜன்னல் கதவை உடைத்து உள்ளே நுழைந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.

மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் மிகுந்த மெயின் பஜாரில் உள்ள வணிக வளாகத்திலேயே மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ள இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory