» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பிற மத தலங்கள் அருகில் விநாயகர் சிலைகள் வைக்க வேண்டாம்: அரசு அறிவுறுத்தல்!
திங்கள் 26, ஆகஸ்ட் 2024 12:01:32 PM (IST)
பிற மத தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் விநாயகர் சிலைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாத்து மகிழ்ச்சியுடன் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை கொண்டாடுவது தொடர்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது குறித்து மாண்புமிகு உச்ச நீதிமன்றம், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்டோர் அளித்துள்ள வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
மேலும் கெமிக்கல் பொருட்களை தவிர்த்து நமது மாவட்டத்தில் காருக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் செய்யப்படும் சுற்றுசூழலுக்கு உகந்த சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலைகளை அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறும் இது தொடர்பான பின்வரும் வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்றிடவும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
1. களிமண்ணால் உள்ளிட்ட சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டும் செய்யப்பட்ட (பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) போன்ற கெமிக்கல்கள் சேர்க்கப்படாத) விநாயகர் சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
2. ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். வர்ணம் பூசுவதற்கு சுற்றுச்சூழலுக்குகந்த நீர் சார்ந்த / மக்கக் கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சிலைகளை அழகுபடுத்த இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்.
3. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், கெமிக்கல் வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்கள், நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம்/எண்ணெய் வண்ணப்பூச்சுகள், எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகள், பாலியஸ்டர் ஆடைகள் போன்ற இரசாயன பொருட்களை பயன்படுத்தக்கூடாது.
4. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்களின்படி, சிலைகளை செய்து விற்பனை செய்பவர்கள் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பின் அனுமதியினை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். (உள்ளுர் மண்பாண்ட தொழிலாளர்கள் ஏற்கனவே உரிய அனுமதிகளை பெற்றுள்ளதால், அனுமதிக்கப்பட்ட பொருட்களால் சிலை செய்வதற்கு அவர்கள் மீண்டும் அனுமதி பெற தேவையில்லை)
5. அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டும் பாதுகாப்பான முறையில் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்படுகிறது. மாண்புமிகு உச்சநீதிமன்ற உத்தரவின்படி, கெமிக்கல் பொருட்களால் ஆன சிலைகளை பொது இடங்களில் அமைக்கவோ, நீர்நிலைகளில் கரைக்கவோ அனுமதி இல்லை.
6. மாண்புமிகு உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அரசாணை நிலை எண். 598 பொது (சட்டம் ஒழுங்கு) துறை நாள் 09.08.2018ன்படி தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்றிட வேண்டும்.
7. சிலை வைக்கும் இடம் அரசு நிலம் எனில் சம்பந்தப்பட்ட அரசு துறையிலும், தனியார் நிலம் எனில் நிலத்தின் உரிமையாளரிடமும் தடையின்மை சான்று பெற்றும், தீயணைப்பு துறை தடையின்மை சான்று, மின்சார இணைப்பு / ஜெனரேட்டர் பயன்பாடு குறித்த சான்று ஆகியவற்றுடன் அதற்கென உள்ள படிவம்-1ல் சிலை வைக்க விரும்பும் நபர் அந்தந்த பகுதியின் காவல் ஆய்வாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அமைப்புகள் சார்பில் விண்ணப்பிக்கும் போது அப்பகுதி பொறுப்பாளரின் முழுமையான விபரங்கள் அளிக்கப்பட வேண்டும்.
8. பரிசீலனைக்குப் பின் காவல் ஆய்வாளரின் பரிந்துரைக்கப்படும் விண்ணப்பங்கள் அவரால், திருநெல்வேலி மாவட்ட காவல்துறைக்குட்பட்ட பகுதியெனில், தொடர்புடைய சார் ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கும், திருநெல்வேலி மாநகர காவல் பகுதியெனில் உதவி காவல் ஆணையாளருக்கும் அனுப்பப்படும். முழுமையான விபரங்கள், ஆவணங்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
9. மேற்படி பரிந்துரை, சான்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் சட்ட விதிகளுக்குட்பட்டு, மேற்படி அலுவலர்களால் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படும். மாண்புமிகு உச்ச நீதிமன்றம், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோரின் வழிகாட்டுதல்களின்படி இந்த அனுமதி பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
i. பிற மத தலங்கள் / மருத்துவமனைகள் / கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிலைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
ii. நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்தில் எந்த ஒரு அரசியல், மதம் மற்றும் சாதி சார்ந்த /ப்ளெக்ஸ் போர்டுகள் அமைக்கக் கூடாது.
iii. அனுமதிக்கப்பட்ட சிலைகளின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது.
iஎ. சிலைகள் நிறுவிட அனுமதிக்கப்பட்ட இடங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் தலா 2 மணி நேரம் வரை மட்டுமே ஒலி அமைப்புகள் பயன்படுத்திடலாம். இதில் கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்த கூடாது.
இனவெறியைத் தூண்டும் வகையிலும், பிற மதத்தினரின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையிலும் முழக்கங்களை எழுப்புவது எந்த வகையிலும் அனுமதிக்கப்படமாட்டாது.
எ. சிலையின் பாதுகாப்பிற்காக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் இரண்டு தன்னார்வலர்களை இரவு மற்றும் பகல் நேரங்களில் நியமிக்க வேண்டும். சிலைகள் நிறுவும் இடங்களில் முறையான வெளிச்சம் இருக்க வேண்டும். மின் தடை ஏற்பட்டால் ஜெனரேட்டர் செட் வசதியை உபயோகித்துக் கொள்ளலாம்.
எi. வழிபாட்டிற்காக பொது இடங்களில் நிறுவப்பட்ட விநாயகர் சிலைகள் காவல்துறை அனுமதிக்கும் நாளில் அனைத்து விதிகளுக்குட்பட்டு கரைப்பதற்காக எடுக்கப்பட வேண்டும்.
எii. நான்கு சக்கர வாகனங்களான மினி லாரி / டிராக்டர் ஆகியவை மட்டுமே சிலைகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட வேண்டும். மாட்டு வண்டி / மூன்று சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
10. விநாயகர் சிலைகளை கீழே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படுகிறது.
அனுமதிக்கப்பட்ட பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக கண்டறிப்பட்ட நீர்நிலைகள்
1. திருநெல்வேலி நகரம் செயற்கை குளம் பேராட்சி அம்மன் கோவில் அருகில், திருநெல்வேலி
2. உவரி கடற்கரை
3. கூடங்குளம் செட்டிகுளம் கடற்கரை
4. கூடங்குளம் தில்லைவனம் தோப்பு கடற்கரை
5. சேரன்மகாதேவி காருகுறிச்சி குளம்
6. அம்பாசமுத்திரம்வாகைக்குளம்
உச்சநீதிமன்ற உத்தரவு, மற்றும் மதுரை கிளை உத்தரவு, தென்மண்டல பசுமை தீர்ப்பாய உத்தரவு, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட அனைத்து வழிகாட்டுதல்களையும் தவறாமல் பின்பற்றி சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சதுர்த்தி விழாவினை அனைவரும் கொண்டாடும்படி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
TamilanAug 26, 2024 - 01:33:04 PM | Posted IP 162.1*****