» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஊருக்குள் புகுந்த காட்டு யானை பொதுமக்கள் பீதி : தென்காசியில் பரபரப்பு!
திங்கள் 26, ஆகஸ்ட் 2024 1:09:09 PM (IST)
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி, கரிசல் குடியிருப்பு கிராமத்தில் உள்ள கரிசல்குளம் பகுதியில் உலாவரும் ஒற்றை யானையால் அந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர் .
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பண்பொழி, வடகரை, அச்சன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை தின்பதோடு மிதித்து நாசம் செய்து விட்டு அதிகாலையில் வனப்பகுதிக்குள் சென்று விடும்.
இந்நிலையில் விவசாய நிலங்கள் அதிகம் உள்ள பண்பொழி கரிசல் குடியிருப்பு பகுதிக்கு நேற்று நள்ளிரவு வந்த ஒற்றை காட்டு யானை விடிந்த பிறகும் வனப்பகுதிக்குள் செல்லாமல் கரிசல் குடியிருப்பு ஊர் பகுதியில் சுற்றி வருகிறது.இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
மேலும், சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற வனத்துறையினர் யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. மாறாக அந்த ஒற்றை காட்டுயானை கரிசல் குடியிருப்பு ஊர் பகுதியில் உள்ள கரிசல்குளம் குளத்தை சுற்றி உலா வருகிறது. இதனால் விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்குள் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கும் அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.
இன்று காலையில் வழக்கம்போல் கரிசல்குளம் பகுதிக்குச் சென்ற அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகச்சாமி (53) என்பவரை யானை மிதித்ததாகவும் இதில் அவர் பலத்த காயம் அடைந்து அங்கிருந்து தப்பித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சமும் பீதியும் ஏற்ப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு யானையை விரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது கரிசல் குடியிருப்பு கிராம் முழுவதும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்தடை செய்யப்ப்பட்டுள்ளது.
மேலும் வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் தங்கள் வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம். குறிப்பாக பொதுமக்கள் விவசாயிகள் யாரும் கரிசல்குளம் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும், தற்போது தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், யானையை விரட்டுவதற்காக வனத்துறையினர் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் கரிசல் குடியிருப்பு குடியிருப்பு பகுதியில் உள்ள மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லவில்லை. நாள்தோறும் வேலைக்குச் செல்லும் நபர்கள் யாரும் வேலைக்கு செல்லவில்லை. விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களுக்கு செல்லாமல் தங்கள் வீடுகளுக்குள் அச்சத்துடன் இருந்து வருகிறார்கள்.
ஆனாலும் அந்தப் பகுதியில் உள்ள இளைஞர்கள் தங்கள் வீட்டு மாடி மற்றும் அந்த ஊரில் உள்ள உயரமான கட்டிடங்களின் மாடிகளின் நின்று ஊர் பகுதிக்குள் உலா வரும் காட்டு யானையை தங்களது செல்போன்கள் மீதும் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வருகிறார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே கமல் கிஷோர், தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி.ஆர். ஸ்ரீசீனிவாசன் ஆகியோர் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் கரிசல் குடியிருப்பு பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதோடு ஊருக்குள் புகுந்துள்ள ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் அச்சத்தையும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.