» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கல்லூரி கட்டணத்துக்கு பணம் கேட்ட மாணவரை அடித்துக்கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை!
புதன் 28, ஆகஸ்ட் 2024 8:13:39 AM (IST)
கல்லூரி கட்டணத்துக்கு பணம் கேட்ட என்ஜினீயரிங் மாணவரை அடித்துக்கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளம் மேலத்தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து (49), ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருடைய மனைவி மீனாட்சி. இவர்களது மகன் வேல்முருகன் (21). இவர் வள்ளியூர் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மீனாட்சி தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வந்தார்.
எனினும் வேல்முருகன் படிப்பு தொடர்பாக தனது தந்தையுடன் சீலாத்திகுளத்தில் தங்கி இருந்தார். கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ந் தேதி வேல்முருகன் தனது கல்லூரி படிப்பு கட்டணத்துக்கும், வீட்டு செலவுக்கும் பணம் கேட்டது தொடர்பாக இசக்கிமுத்துவுடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இசக்கிமுத்து அன்றைய தினம் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த வேல்முருகனை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இசக்கிமுத்துவை கைது செய்தனர். இந்த கொலை வழக்கு விசாரணை நெல்லை முதலாவது மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி பத்மநாபன் வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில் மகனை கொன்ற தந்தை இசக்கிமுத்துவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வக்கீல் கருணாநிதி ஆஜரானார்.