» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாவட்ட வாக்குச்சாவடிகளின் வரைவுப்பட்டியல்: ஆட்சியர் வெளியிட்டார்!
வியாழன் 29, ஆகஸ்ட் 2024 12:55:13 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் வரைவுப் பட்டியலினை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (29.08.2024) இந்திய தேர்தல் ஆணைய அறிவுரையின்படி வாக்குச்சாவடிகள் தொடர்பாக கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் பெறுவதற்கு வாக்குச்சாவடிகளின் வரைவுப்பட்டியலினை மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன், வெளியிட்டார்கள்.
இந்திய தேர்தல் ஆணைய அறிவுரையின்படி 2025 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை முன் திருத்தப்பணிகள் 2024 ஆகஸ்ட் 20 முதல் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாக்குச்சாவடிகளை பகுப்பாய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் 27.03.2024 அன்று வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் வாக்குச்சாவடிகளின் விபரம் கீழக்கண்டவாறு உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அட்டவணைப்படி அரசியல் கட்சிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், குடியிருப்போர் நலச்சங்க உறுப்பினர்கள் ஆகியோர்களிடமிருந்து வாக்குச்சாவடிகள் தொடர்பாக கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் பெறுவதற்கு வாக்குச்சாவடிகளின் வரைவுப்பட்டியல் 29.08.2024 இன்று வெளியிடப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 1486 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 1500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைத்தல், பழுதடைந்த வாக்குச்சாவடிகளை மாற்றுதல், வாக்குச்சாவடிகளின் அமைவிடம் / கட்டிட மாற்றம் மற்றும் வாக்குச்சாவடிகளின் பெயர் திருத்தம் ஆகிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கீழ்க்கண்ட விவரப்படி வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு செய்யப்பட உள்ளன.
எனவே அரசியல் கட்சிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், குடியிருப்போர் நலச் சங்க உறுப்பினர்கள் எவருக்கேனும் ஆட்சேபணை அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனில் எழுத்துப்பூர்வமான கடிதங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் அல்லது திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் 05.09.2024-க்குள் அளிக்கலாம்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மகேஸ்வரன் , திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா , வட்டாட்சியர் சரவணன் , தேர்தல் வட்டாட்சியர் பாலமுருகன் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.