» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பைக் மீது கார் மோதல்: ஐடி நிறுவன ஊழியர் பலி
செவ்வாய் 10, செப்டம்பர் 2024 7:59:51 AM (IST)
கயத்தாறு அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் ஐடி நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மன்னராஜா கோயில் தெருவைச் சேர்ந்தவர் கணபதி மகன் ஆனந்த்(31). கோயம்புத்தூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர், கோயம்புத்தூரில் இருந்து திசையன்விளைக்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் மீண்டும் கோயம்புத்தூருக்கு பைக்கில் திரும்பினாராம்.
திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு அருகே உள்ள ஆற்றங்கரை சுடலைமாடன் கோயில் அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த கார் மோதியதில் அருகில் இருந்த ஓடையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்ததில் சம்பவ இடத்திலேயே ஆனந்த் உயிரிழந்தார்.
கயத்தாறு போலீசார், சடலத்தைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் காரில் இருந்த சிலருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து கார் ஓட்டுநர் தென்காசி மாவட்டம் அமுதாபுரத்தைச் சேர்ந்த ப.செல்வத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
SelvarajSep 10, 2024 - 12:34:39 PM | Posted IP 162.1*****