» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை அருகே பள்ளி மாணவர்களுக்குள் தகராறு; 5-ம் வகுப்பு மாணவனை தாக்கிய தம்பதி கைது

சனி 14, செப்டம்பர் 2024 8:30:14 AM (IST)

நெல்லை அருகே பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், 5-ம் வகுப்பு மாணவனை தாக்கிய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை அருகே உள்ள தருவை பகுதியில், ஒரு சிறுவனை தம்பதி தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் தாக்குதலுக்கு உள்ளாகும் சிறுவன் கதறி அழுவது கண் கலங்கச்செய்தது. இதுதொடர்பாக நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவுப்படி, முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அந்த சிறுவன் நெல்லை அருகே உள்ள தருவை பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவன் என்பது தெரியவந்தது.

சம்பவத்தன்று பள்ளியில் வைத்து அந்த மாணவனுக்கும், அவனுடன் படிக்கும் மற்றொரு மாணவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதை அறிந்த மற்றொரு மாணவனின் தந்தை மற்றும் தாய் ஆகியோர், அந்த மாணவனின் வீட்டுக்கு தேடிச் சென்றனர். அப்போது அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுவனை பிடித்து சரமாரியாக தாக்கி இழுத்துச் சென்றதும், இந்த சம்பவம் கடந்த 10-ந்தேதி நடைபெற்றது என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

காயம் அடைந்த சிறுவன், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளான். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட அந்த பகுதியை சேர்ந்த ஜோதி கிளி (வயது 38), அவருடைய மனைவி இசக்கி ராணி (35) ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து ஜோதி கிளி, இசக்கி ராணி ஆகிய இருவரையும் கைது செய்தனர். நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் இடையே சாதி ரீதியான மோதல்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பள்ளியில் சிறுவர்களுக்கு இடையே நடந்த ஒரு தகராறு காரணமாக, பெற்றோர் சென்று தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory