» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மாணவியை மது குடிக்க அழைத்த பேராசிரியர் கைது; நெல்லையில் பரபரப்பு!!

சனி 14, செப்டம்பர் 2024 5:05:24 PM (IST)

பாளையங்கோட்டை கல்லூரி மாணவியை மது குடிக்க அழைத்த பேராசிரியர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒரு பேராசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் புதிய தூய சவேரியர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 4,000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். நூற்றாண்டு பழமை வாய்ந்த கல்லூரி என்பதாலும் தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என சொல்லப்படும் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள முக்கிய கல்லூரி என்பதாலும் இங்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் பலர் வந்து படிக்கின்றனர்.

இங்கு சமூகவியல் துறை பேராசிரியர்களாக பணிபுரியும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ஜெபஸ்டின்(40), தூத்துக்குடியை சேர்ந்த பால்ராஜ்(40) ஆகிய இருவரும் கடந்த 4-ந்தேதி இரவில் நெல்லை மாநகர பகுதியில் ஒரு விடுதியில் மது குடித்தனர். ஒரு கட்டத்தில் மது போதை அதிகமாகவே, நள்ளிரவு நேரத்தில் தனது துறையில் படிக்கும் குறிப்பிட்ட மாணவி ஒருவருக்கு போன் செய்துள்ளனர்.

முதலில் பால்ராஜ் அந்த மாணவியிடம் ஆபாசமாக பேசிக் கொண்டிருக்க, ஜெபஸ்டின் அந்த செல்போனை பிடுங்கி ஆபாசமாக பேசியதோடு நாங்கள் 2 பேரும் மது குடித்துக் கொண்டிருக்கிறோம். மது குடிக்க வா என்று கூறி அழைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். உடனே ஆத்திரம் அடைந்த பெற்றோர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 5ம் தேதி புகார் அளித்தனர்.

மறுநாள் அந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்குவதற்குள், இந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் புகார் கொடுத்தால் எனது மகளின் படிப்பு பாதிக்கப்பட்டு விடும். எனவே மேல் நடவடிக்கை எதுவும் வேண்டாம் என்று மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வேறு வழியில்லாமல் அந்த புகார் மனுவை போலீசார் கிடப்பில் போட்டுவிட்டனர்.

அதேநேரத்தில் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று மாணவியின் பெற்றோர் கூறியதை எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கி கொண்டு அவர்களை அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் இந்த தகவல்களை அறிந்த இந்து முன்னணி உள்ளிட்ட சில அமைப்பினர் சம்பந்தப்பட்ட பேராசிரியர்களை கைது செய்யாவிட்டால் நீதிமன்றத்தை நாடப் போவதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தெரியவரவே, விசாரணை தீவிரமானது.

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஸ் குமார் மீனா, இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தி விசாரணை நடத்தினார். அதில் பேராசிரியர்களான ஜெபஸ்டின், பால்ராஜ் ஆகிய 2 பேரும் மாணவிக்கு போன் செய்து ஆபாசமாக பேசியது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து நேற்று நள்ளிரவு தனிப்படை போலீசார் தூத்துக்குடி விரைந்தனர். ஜெபஸ்டினை கைது செய்தனர்.

இதற்கிடையில் போலீசார் வரும் தகவல் அறிந்த பேராசிரியர் பால்ராஜ் தலைமறைவானார். அவரை தனிப்படையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் பாளையங்கோட்டை போலீசார் 2 பேராசிரியர்கள் மீதும் பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாக கூறி இந்திய தண்டனை சட்டம் 74, 75, 79(5) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும், கல்லூரி மாணவியை மதுகுடிக்க அழைத்த 2 பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்று அழைக்கப்படும் நெல்லை பாளையங்கோட்டையில் பிரபல தனியார் கல்லூரி பேராசிரியர்கள் மாணவியிடம் நள்ளிரவில் ஆபாசமாக பேசி மது குடிக்க அழைத்த சம்பவம் கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

மதுSep 15, 2024 - 12:40:56 PM | Posted IP 172.7*****

மாது ரெண்டுமே கேடு தான்

தமிழ்ச்செல்வன்Sep 15, 2024 - 09:45:40 AM | Posted IP 172.7*****

இந்து முன்னணியின் நோக்கம் கிறிஸ்தவ கல்லூரியை கேவலப்படுத்துவதாக கூட இருக்கலாம். ஆனால் அந்த மாணவிக்கு நியாயம் கிடைக்க கர்த்தர் இந்து முன்னணி நண்பர்களை பயன்படுத்தி இருக்கிறார். எல்லாம் அவன் செயல்.... அவனின்றி அணுவும் அசையாது...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory