» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வெள்ளநீர் கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி: நெல்லை அருகே சோகம்

திங்கள் 16, செப்டம்பர் 2024 8:33:46 AM (IST)

நெல்லை அருகே புதுமனை புகுவிழாவுக்கு வந்த இடத்தில்  வெள்ளநீர் கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

நெல்லை அருகே உள்ள கொங்கந்தான்பாறை காமராஜர்நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் ஆண்ட்ரூஸ் (17). இவர் பாளையங்கோட்டை அருகே உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருடன் ஜோதிபுரத்தைச் சேர்ந்த ஜேக்கப் மகன் அருண்குமார் (18), பெருமாள்புரம் தாமஸ் தெருவை சேர்ந்த போலீஸ்காரர் வில்லியம் மகன் நிக்கில் (17) ஆகியோரும் அதே பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தனர்.

அருண்குமார், ஆண்ட்ரூஸ், நிக்கில் ஆகியோர் தங்கள் நண்பர்கள் மேலும் 3 பேருடன் சேர்ந்து நெல்லை அருகே மேலத்திடியூர் வடுவூர்பட்டியில் தங்களுடன் படிக்கும் நண்பரின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு நேற்று சென்றனர். அங்கு மதியம் 6 பேரும் சாப்பிட்டுவிட்டு வெள்ளநீர் கால்வாயில் குளிக்கச் சென்றனர். 

இந்த கால்வாயானது, தாமிரபரணி ஆற்றில் மழை வெள்ளக்காலத்தில் ஸ்ரீவைகுண்டம் அணையைக் கடந்து வீணாகச் செல்லும் தண்ணீரை வறண்ட பகுதியான திசையன்விளை பகுதிக்கு கொண்டு செல்வதற்காக வெள்ளங்குழியில் இருந்து அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கால்வாயில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையில் தண்ணீர் விட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. அதன் பிறகு அந்த வெள்ளநீர் கால்வாயில் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. அவர்கள் 6 பேரும் கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அருண்குமார், ஆண்ட்ரூஸ் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றனர். சிறிது நேரத்தில் 2 பேரும் தண்ணீரில் மூழ்கினார்கள். இதை பார்த்த நிக்கில் அவர்களை காப்பாற்ற சென்றார். அப்போது அவரும் தண்ணீரில் மூழ்கினார்.

இதை பார்த்த மற்ற நண்பர்கள் 3 பேரும் அதிர்ச்சி அடைந்து, "காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என அபயக்குரல் எழுப்பினர். அவர்களின் சத்தம் கேட்டு அங்கு குளித்துக்கொண்டிருந்த பொதுமக்கள் உடனடியாக ஓடி வந்தனர். தண்ணீரில் மூழ்கிய 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி, பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் நிலை அலுவலர் லிங்கதுரை தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தண்ணீரில் இறங்கி ரப்பர் டியூப்கள் மூலம் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மாணவர்கள் அருண்குமார், ஆண்ட்ரூஸ், நிக்கில் ஆகிய 3 பேரின் உடல்களை மீட்டனர். 

பின்னர் அவரது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். நண்பரின் புதுமனை புகுவிழாவுக்கு வந்த இடத்தில், வெள்ளநீர் கால்வாயில் மூழ்கி 3 மாணவர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தண்ணீரில் மூழ்கி இறந்த மாணவர்களை உயிருடன் மீட்பதற்காக தீயணைப்பு படை வீரர்கள் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கும், முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கும் 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவினர் அங்கு தயாராக நின்றனர். மேலும் வருவாய்த்துறையினரும் சம்பவ இடத்தில் நின்றனர். ஆனால் எதுவும் பலன் அளிக்கவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory