» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வேலை வாய்ப்பு முகாமில் 593 பேருக்கு பணி நியமன ஆணை: சபாநாயகர் மு.அப்பாவு வழங்கினார்

சனி 21, செப்டம்பர் 2024 5:25:42 PM (IST)



திருநெல்வேலியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 593 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் இன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 593 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராபர்ட் புரூஸ், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி.ஆர்.மனோகரன், மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத் தலைவர் விஜிலா சத்தியானந்த் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

இன்று பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் காலை 10.00 மணி முதல் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 113 நிறுவனங்கள் கலந்து கொண்டனர். 3113 வேலைநாடுநர்கள் நேர்முக தேர்வில் பங்கெற்றனர். இதில் 548 வேலைநாடுநர்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணிறியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள டாடா சோலார் பிரைவெட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிவதற்கு வாய் பேசாத மற்றும் காது கேட்காத மாற்றுத்திறனாளிகள் மட்டுமே தேர்ந்தெடுப்பதற்காக நேரடி தேர்வில் 85 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டதில் 45 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது இன்று ஒரு சிறப்பு அம்சமாகும். தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படித்த முடித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு திருநெல்வேலி மாவட்டத்தில் 8 தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 5768 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. 

இன்று நடத்தப்படும் 9வது வேலை வாய்ப்பு முகாமில் 593 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாட்டிற்கு சென்று ரூ.7,611 கோடி மூலதனம் கொண்டு வந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்குவதற்கான வழிவகை செய்துள்ளார்கள். தமிழ்நாட்டில் படித்து முடித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற வேண்டும், வரும் இளம் தலைமுறையினர் அனைவரும் படித்து முடித்து பயிற்சி பெற்று வேலை வாய்ப்பை பெற்று ஒரு நல்ல குடும்பத்தை அமைக்க வேண்டும். என்பதற்காக பல்வேறு நடடிவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள டாடா சோலார் பவர் பிளான்ட் நிறுவனத்தில் 3000த்திற்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அதில் 80 சதவீதம் பேர் பெண்கள் தான் இந்த வாய்ப்பினை உருவாக்கி தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு உங்கள் அனைவரின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் தனி சிறப்பு என்றால் டாடா சோலார் பவர் பிளான்ட் நிறுவனத்தில் வாய்பேசாத மற்றும் காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி கொடுத்து நேரடி தேர்வின் மூலம் அந்நிறுவனத்தில் பணிபுரிவதற்கான ஆணைகள் இன்று வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு தனி சிறப்பு அம்சமாக போற்றப்படுகிறது. 

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கத்தில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்தனவேல் பாண்டியன் கமிட்டி அளித்த அறிக்கையின் அடிப்படையில் நாங்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு 2,519 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இதற்கான முயற்சியை மேற்கொண்ட அப்போதைய ஒன்றிய முன்னாள் அமைச்சர் முரசொலிமாறன், நாங்குநேரியில் சிறப்பு பொருளாhதார மண்டலமாக அறிவித்தார்கள். முத்தமிழறிஞர் கலைஞர் அடிக்கல் நாட்டினார்கள். 

இதன் மூலம் தென் மாவட்டங்களில் பல இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டது. நிலத்தை குத்தகை பெற்ற ஏஎம்ஆர்எல் நிறுவனம் எந்தப்பணியும் நாங்குநேரியில் மேற்கொள்ளவில்லை மாறாக ரூ.855 கோடிக்கு நிறுவனத்தில் அடமானம் வைத்து கடன் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து டிட்கோ தனியார் நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தத்தை கடந்த டிசம்பர் மாதம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நாங்குநேரியில் முற்கட்டமாக 500 ஏக்கர் நிலத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் 24 ஆண்டுகளுக்கு பிறகு நாங்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டம் மீண்டும் புத்துயிர் பெறவுள்ளது.

இளைஞர்கள் பயனடைந்து வேலைவாய்ப்பினை பெறும் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் நமக்கு வழங்கி வருகிறார்கள். இன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் மற்றும் ஆணைகள் பெற்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் இலக்குவன், மண்டல இணை இயக்குநர் வேலைவாய்ப்பு (பொ) கா.சண்முகசுந்தர், உதவி இயக்குநர்கள் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மரிய சகாய ஆன்டனிதாஸ், ஹரிபாஸ்கர், தூய யோவான் கல்லூரி முதல்வர் ஆண்டுருஸ், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சிவசங்கர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாஸ்கர், களக்காடு நகர்மன்ற துணைத் தலைவர் பி.சி.ராஜன், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணைத் தலைவர் இசக்கி பாண்டி முக்கிய பிரமுகர் பெல்சி, மற்றும் அரசு அலுவலர்கள், வேலைநாடுநர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory