» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் நிலநடுக்கம் : இயற்கை வள பாதுகாப்பு சங்கம் எச்சரிக்கை!
ஞாயிறு 22, செப்டம்பர் 2024 6:50:38 PM (IST)
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இயற்கை வளங்களை நாம் அழித்துக் கொண்டிருப்பதால் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என இயற்கை வள பாதுகாப்புச் சங்க நிர்வாகியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே ரவி அருணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் அரசுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள லேசான நில அதிர்வு செய்தி அறிந்து இயற்கை வள பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாங்கள் பல நாட்களாக இதைத்தான் சொல்லி வந்தோம்.
நம் பகுதியில் உள்ள கல் குவாரிகள் பூமியை தோண்டி அதில் அதிநவீன சக்தி வாய்ந்த வெடி மருந்துகளை பயன்படுத்தி வெடிக்க வைத்து பாறை இடுக்குகளில் உள்ள தண்ணீரை எல்லாம் வெளியில் கொண்டு வந்து ஆவியாக செய்து பல லட்சம் டன் கனிம வளங்களை கேரளாவிற்கு கொண்டு செல்கிறார்கள்
இதனால் முதலில் விவசாயம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. அதன் பின் நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு சில அமைப்புகள் கணித்திருந்தது. அதன் பின்னும் அடங்காத இந்த கனிமவள கொள்ளையர்கள் மீண்டும் மீண்டும் அதே வேலையை செய்து அளவுக்கு அதிகமான கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்தி வந்தனர்.
அதனை விளைவாக இயற்கை இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இனியாவது அரசாங்கம் விழித்துக் கொண்டு அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடை செய்ய தனி சட்டம் இயற்ற வேண்டும்.
தமிழகத்தில் இருந்து இயற்கை வளங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு அனைத்து கட்சிகளுமே எதிராக குரல் கொடுக்காமல் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஒரு சில எதிர்க்கட்சி தலைவர்கள் போராட்டம் செய்யப் போவதாக குரல் எழுப்பினாலும் அவர்களை போராட்டம் செய்யவிடாமல் கனிமவள கடத்தல் காரர்கள் சரி கட்டி விடுகின்றனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகாவது அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் கனிம வள கடத்தலுக்கு எதிராக குரல் கொடுத்து தமிழகத்தை பாதுகாக்க வேண்டும் என்று இயற்கை வள பாதுகாப்பு சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தான் விடியல்Sep 22, 2024 - 07:59:37 PM | Posted IP 172.7*****