» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை: சொத்து தகராறில் உறவினர் வெறிச்செயல்!!
திங்கள் 23, செப்டம்பர் 2024 8:28:26 AM (IST)
நெல்லையில் சொத்து தகராறில் வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை ராமையன்பட்டி சப்பானி மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் சீனிவாசன் (30), பெயிண்டர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினரான சுப்பிரமணியன் மகன் இசக்கிபாண்டி (26) என்பவருக்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு 7 மணி அளவில் சீனிவாசன் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பினார். வீட்டின் உள்ளே சென்று கை, கால்களை கழுவிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு கையில் அரிவாளுடன் வந்த இசக்கிபாண்டி தகராறு செய்து சீனிவாசனை கழுத்தில் பலமாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட இசக்கிபாண்டி வீட்டில் இருந்து வெளியே வந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மடக்கிப்பிடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை ஊரக பகுதி போலீஸ் துணை சூப்பிரண்டு பொன் ரகு, மானூர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் இசக்கி பாண்டியை பிடித்து அவரிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் கொலை செய்யப்பட்ட சீனிவாசன் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிபாண்டியை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சீனிவாசனுக்கு கலா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். அவர் சம்பவம் நடந்த போது களக்காட்டில் உள்ள தனது தாயார் வீட்டில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நெல்லையில் வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.