» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கோதையாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்தார் சபாநாயகர் மு.அப்பாவு!
புதன் 25, செப்டம்பர் 2024 12:54:37 PM (IST)
கோதையாறு பாசன திட்ட அணைகளிலிருந்து இராதாபுரம் கால்வாய் பாசனத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இராதாபுரம் கால்வாய் பாசனத்திற்காக கோதையாறு பாசன திட்ட அணைகளிலிருந்து இராதாபுரம் கால்வாய் நிலப்பாறை பகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு , திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராபர்ட் புரூஸ் முன்னிலையில் இன்று (25.09.2024) தண்ணீர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அவர் தெரிவித்ததாவது; திருநெல்வேலி மாவட்டம், இராதாரபும் சட்டமன்ற தொகுதியிலுள்ள இராதாபுரம் கால்வாய் மறைந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த சௌந்தரபாண்டியன் அவர்களின் முயற்சியால் கால்வாய் அமைக்கப்பட்டது. 28.800 கி.மீ தூரத்திற்கு கடைசியாக இராதாபுரத்திலுள்ள மகேந்திரகுளம் வரை மொத்தம் 52 குளங்கள் பாசனம் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிரந்தரமாக 15980 ஏக்கர் நேரடி பாசனம் ஆயக்கட்டு நிலங்களுக்கும், 1012.15 ஏக்கர் நிலத்தில் 52 குளங்கள் மூலமும் பாசன வசதிகள் கால்வாய் மூலம் பெறப்பட்டு வருகிறது. மேலும், பேச்சிப்பாறை அணையிலிருந்து தோவாளை கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விட்டு, 15 நாட்கள் கழித்து இராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடப்படும். இந்தாண்டு தோவாளை கால்வாயில் பெரிய உடைப்பு ஏற்பட்டதால் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்பேரில், நீர்வளத்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி சரிசெய்யப்பட்டுள்ளது.
தற்போது, தமிழ்நாடு முதலமைச்சர் , கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசன திட்டத்தின் கீழுள்ள இராதாபுரம் கால்வாய் பாசனத்திற்கு கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து இன்று (25.09.2024) முதல் 09.02.2025 வரை 138 நாட்களுக்கு விநாடிக்கு 150 கன அடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார்கள்.
அதனடிப்படையில், நிலப்பாறை பகுதியில் கோதையாறு பாசன திட்ட அணைகளிலிருந்து இராதாபுரம் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இராதாபுரம் கால்வாய் நிலப்பாறை கால்வாய் நெடுகை 2050 மீட்டரிலிருந்தது ஆரம்பமாகி இராதாபுரத்தில் உள்ள மகேந்திரன்குளத்தில் முடிகின்றது. இராதாபுரம் கால்வாய் கற்காரையினால் கட்டப்பட்ட கால்வாய் இதன் கொள்ளளவு 150 கன அடி/வினாடிக்கு இதன் மூலம் 52 குளங்கள் பாசனம் பெருகின்றது.
இராதாபுரம் கால்வாய் வாயிலாக 17 ஆயிரம் ஏக்கர் நிலம் நேரடி மற்றும் மறைமுக பாசனம் பெருகின்றது. இராதாபுரம் கால்வாயின் ஆரம்ப பகுதி தவிர மற்ற ஏனைய பகுதிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதனால் லெவிஞ்சிபுரம், கருங்குளம், பழவூர், அடங்கார்குளம், அழகனேரி, தனக்கர்குளம், கூடன்குளம், பரமேஸ்வரபுரம் மற்றும் இராதாபுரம் ஆகிய கிராமங்கள் பயனடையும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், செயற்பொறியாளர் அருள்சன் பிரைட், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜென்ஸிஸ் பிரவின், உதவி செயற்பொறியாளர் கிங்ஸிலி, உதவி பொறியாளர் ஜெயலெட்சுமி, இராதாபுரம் வட்டாட்சியர் கிருஷ்ணகுமார், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், முக்கிய பிரமுகர் ஜோசப் பெல்சி உட்பட அரசு அலுவலர்கள், விவசாய பெருமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.