» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
போதை தடுப்பு செயல் திட்டங்கள்: நெல்லை சரக டிஐஜி மூர்த்தி வெளியிட்டார்
புதன் 6, நவம்பர் 2024 10:03:16 AM (IST)
திருநெல்வேலி மாவட்ட கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள போதை தடுப்பு குழுக்களை சேர்ந்த பயிற்சியாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப்பட்டறையில் போதை தடுப்பு செயல் திட்டங்களை நெல்லை சரக புதிய டிஐஜி மூர்த்தி வெளியிட்டார்.
திருநெல்வேலி மாவட்ட கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள போதை தடுப்பு குழுக்களை சேர்ந்த பயிற்சியாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப்பட்டறை திருநெல்வேலியில் நடந்தது. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் வரவேற்புரை ஆற்றினார். இக்கூட்டத்திற்கு காவல்துறை சரக துணைத் தலைவர் பா. மூர்த்தி தலைமை தாங்கி போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டு பேசும் போது கூறியதாவது :
போதைக்கு எதிரான தடுப்பு குழுக்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலுள்ள 256 கல்லூரிகளில் போதைக்கு எதிரான தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள போதை தடுப்பு குழுக்கள் சேர்ந்த மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும்; போதை தடுப்பு செயல் திட்டங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என அவர் கூறினார். மேலும் நவம்பர் மாதத்திற்குள் மற்ற மூன்று மாவட்டங்களிலும் இந்த பயிற்சியாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப்பட்டறை நடத்தப்படும். அதன் பின்னர் ஒவ்வொரு கல்லூரியிலும் போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
எம்பவர் இந்தியா கௌரவச் செயலாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் ஆ.சங்கர் போதைக்கு எதிரான தடுப்பு குழுக்களின் செயல்பாடுகளை விவரித்தார். தூத்துக்குடி மாவட்ட பொது சுகாதாரத்துறை புகையிலை தடுப்பு பிரிவு மருத்துவர் வேணுகா போதைப் பொருட்கள் உபயோகிப்பதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி படக் காட்சிகள் மூலம் விளக்கி கூறினார். ஆல்பா மைண்ட் கேர் சென்டர் மருத்துவர் நூருல் ஹாசன் போதைப் பொருட்கள் உபயோகிப்பதால் மனதிற்கும்;, உடலுக்கும் ஏற்படும் தீங்குகளைப் பற்றி எடுத்துரைத்தார். திருநெல்வேலி மாவட்ட மது விலக்குத் துறை காவல் துணை கண்காணிப்பாளர் மீனாட்சிநாதன் நன்றியுரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர் இரவீந்திரன், அண்ணா பொறியியல் பல்கலைக்கழக டீன் செண்பக விநாயக மூர்த்தி, போதை தடுப்பு குழுக்கள் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காவல் துறையினர் மற்றும் எம்பவர் மேலாளர் லலிதாம்பிகை, தீபக் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.