» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலியில் பட்டியலின மாணவர் மீது கொடூர தாக்குதல் : சரத்குமார் கண்டனம்!
புதன் 6, நவம்பர் 2024 10:23:10 AM (IST)
திருநெல்வேலியில் பட்டியலின மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு நடிகர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கை : திருநெல்வேலி அருகே 17 வயதான பட்டியலின மாணவர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த மனவேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
எத்தகைய பிரச்சனைகளுக்கும் வன்முறை தான் தீர்வு என கருதி குற்றச்செயல்களில் சிலர் ஈடுபட்டு வருவது அனைத்து சமூகத்தையும் சீரழித்து விடுவதுடன், தனிமனித குற்றங்கள், பொதுவெளியில் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் என்பதை நான் வருத்தத்தோடு சுட்டிக் காட்டுகிறேன்.
அரசியல் பின்புலம், சாதி அரசியல் என பலவற்றைக் காரணமாகக் காட்டி இதுபோன்ற அவலங்களைக் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடக் கூடாது. சமூக நீதியைப் பாதுகாப்பதில் காவல்துறைக்கும் பங்கு உண்டு என்பதால் இந்த சம்பவம் குறித்து உடனடி விசாரணை நடத்தி குற்றம் செய்தவர்களைக் கைது செய்வதோடு சரியான தண்டனை வழங்குவதன் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
சமூகத்தில் கண்டிப்பாக மனமாற்றம் நிகழ வேண்டிய கட்டாயம் உருவாகி இருப்பதைக் கருத்தில் கொண்டு, சாதிப் பிரச்சனைகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அரசு பல நிகழ்வுகளை ஒருங்கிணைக்க வேண்டும் எனவும் அழுத்தமாக தமிழக அரசுக்கு வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.