» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பாலியல் தொல்லை கொடுத்து சிறுவனை கொன்ற வாலிபருக்கு சாகும்வரை சிறை!
புதன் 6, நவம்பர் 2024 10:59:27 AM (IST)
நெல்லை அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கல்லால் அடித்துக்கொன்ற வாலிபருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
நெல்லை அருகே தாழையூத்து குறிச்சிகுளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மூக்கன். இவருடைய மகன் மாயாண்டி (24). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 26-ந் தேதி 9 வயது சிறுவனை காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.
அப்போது அந்த சிறுவன் தனது தந்தையிடம் கூறுவதாக சொன்னதால் பயந்து போன மாயாண்டி, அங்கு கிடந்த கல்லை எடுத்து சிறுவனின் தலை மற்றும் முகத்தில் சரமாரியாக அடித்துக் கொலை செய்தார்.
இந்த கொடூரக்கொலை குறித்து தாழையூத்து போலீசார் வழக்குபதிவு செய்து மாயாண்டியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி சுரேஷ்குமார் (பொறுப்பு) விசாரித்து கடந்த மாதம் 29-ந் தேதி மாயாண்டியை குற்றவாளியாக அறிவித்தார். தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில், மாயாண்டிக்கு சாகும் வரை சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும் தமிழக அரசு பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கவும் கோாட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் போக்சோ நீதிமன்ற சிறப்பு வழக்கறிஞர் ஏஞ்சல் செல்வராணி ஆஜரானார்.
சம்பவத்தன்று சிறுவன் காணாமல் போனதாக அவரின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். தாழையூத்து போலீசார் சிறுவன் மாயம் என முதலில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். 2 நாட்களுக்கு பிறகு முட்புதரில் சிறுவனின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அந்த இடத்தில் குற்றவாளியான மாயாண்டியும் சிறுவனின் உடலை பார்க்க வந்தார். அவரின் கையில் முட்கள் கீறிய காயங்கள் இருந்ததையடுத்து போலீசாரின் சந்தேக வளையத்திற்குள் மாயாண்டி வந்தார்.
மாயாண்டி தனது 19-வது வயதில் சிறுவனை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். அதற்கு முன்பாக சிறுவனாக இருந்தபோது நள்ளிரவில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த வீட்டுக்குள் நுழைந்து அங்கு இருந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.