» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வாகன சோதனையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு வெட்டு: வாலிபர் கைது!
திங்கள் 25, நவம்பர் 2024 8:46:31 AM (IST)
வாகன சோதனையின் போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை வாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் தப்பி ஓட முயன்றபோது தவறி விழுந்ததில் கால்முறிந்தது.
சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வைரமணி மற்றும் போலீசார் சிவகங்கையை அடுத்த சாமியார்பட்டி விலக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதையொட்டி அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். ஆனால் அந்த கார் போலீசார் அமைத்திருந்த தடுப்பின் மீது மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த காரை விரட்டி சென்றனர். வைரம்பட்டி உப்பாறு பாலம் அருகே காரை போலீசார் வழிமறித்தனர். அதிலிருந்த சிவகங்கை அடுத்த புதுப்பட்டியை சேர்ந்த தனசேகரன் (வயது 36) என்பவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த வாளால் சப்-இன்ஸ்பெக்டர் வைரமணியை வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றார். அதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தனசேகரனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதேபோல லேசான காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் முதலுதவி சிகிச்சை பெற்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனசேகரனை கைது செய்தனர். கைதான இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.