» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை அருகே வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: உறவினர்கள் சாலை மறியல்!
செவ்வாய் 26, நவம்பர் 2024 8:23:29 AM (IST)
நெல்லை அருகே வாலிபர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
நெல்லை அருகே பேட்டையை அடுத்த சுத்தமல்லி இந்திரா காலனியை சேர்ந்தவர் அழகுமுத்து மகன் முத்துகிருஷ்ணன் (22). இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை தனது நண்பர்களுடன் அவரது வீட்டின் அருகே உள்ள கல்வெட்டான்குழி பகுதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மர்ம கும்பல் அங்கு வந்தது.
அந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முத்துக்கிருஷ்ணனை சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த வெட்டுக் காயங்களுடன் முத்துக்கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதனை பார்த்ததும் அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சுத்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் முத்துக்கிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயற்சி செய்தனர். அப்போது கொலையாளிகளை உடனடியாக கைது செய்யும் வரை உடலை எடுக்கவிட மாட்டோம் எனக்கூறி அப்பகுதி மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் போலீசார் முத்துக்கிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து முத்துக்கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டதை அறிந்து சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த அவரது உறவினர்கள் சுத்தமல்லி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், "கொலை செய்யப்பட்ட முத்துக்கிருஷ்ணன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கடந்த ஆண்டு நடந்த ஆண்டுவிழாவின்போது வேறொரு தரப்பினர் விசில் அடித்தது தொடர்பாக தட்டிக்கேட்டார். அப்போது தகராறு ஏற்பட்டு அவர்களை இவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இருதரப்பினரிடம் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
எனவே, முன்விரோதம் காரணமாக முத்துக்கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது கஞ்சா பிரச்சினையா, பணம் கொடுக்கல் வாங்கல் காரணமா அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் சுத்தமல்லி பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.