» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஏழுமலையான் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு: சங்கரன்கோவிலை சேர்ந்தவர் கைது
புதன் 27, நவம்பர் 2024 8:28:22 AM (IST)
திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் பணம் திருடிய சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உண்டியல்களில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி ஒருவர் உண்டியல் காணிக்கை பணத்தை திருடும் காட்சி பதிவாகி இருந்தது. இதுகுறித்து அந்தப்பகுதி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் பிற்பகல் 2 மணியளவில் மர்ம நபர் ஒருவர் உண்டியல் பணத்தை திருடியது தெரிய வந்தது.
அதன்பேரில் ஒருவரை பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தமிழ்நாடு மாநிலம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த வேணுலிங்கம் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் உண்டியலில் பணம் திருடியதை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து அவரிடமிருந்து ரூ.15 ஆயிரத்தை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.