» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சிறுபான்மையினருக்கு தமிழகம் பாதுகாப்பான மாநிலமாக திகழ்கிறது: மாநில ஆணையத் தலைவர்

புதன் 4, டிசம்பர் 2024 5:41:16 PM (IST)



சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் சொ. ஜோ அருண் கூறியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிறுபான்மையினர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் சொ.ஜோ அருண் சே.ச., தலைமையில் இன்று (04.12.2024) நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன், ஆணையத்தின் துணைத் தலைவர் எம்.எம்.அப்துல்குத்தூஸ் (எ) இறையன்பன்குத்தூஸ், உறுப்பினர்கள் ஹேமில்டன் வில்சன், A.ஸ்வர்ணராஸ், நாகூர் A.H.நஸிமுதீன், பிரவீன்குமார் டாட்டியா, ராஜேந்திர பிரசாத், ஜோ.முகமதுரபீ, எஸ்.வசந்த் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், சிறுபான்மையினரின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, சிறுபான்மையினர்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யவும், மேலும் இப்பணிகளை விரைவுப்படுத்த தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நாமக்கல், சேலம், கரூர், கோயம்புத்தூர், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சிறுபான்மையின சமுதாயத்தை சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு, அக்கூட்டத்தின் வாயிலாகவே தகுதியுடைய கோரிக்கைகளுக்கு அன்றைய தினமே தீர்வு காணப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று சிறுபான்மையின அமைப்பை சார்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கிறித்தவர்களின் பயன்பாட்டிற்காக கல்லறை தோட்டம் அமைத்தல் மற்றும் முஸ்லிம்களின் பயன்பாட்டிற்காக கபர்ஸ்தான் அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் கல்லறை தோட்டங்கள், கபர்ஸ்தானங்களுக்கு சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை ஏற்படுத்தி அதில், பேவர் பிளாக் அமைத்து தருதல் போன்ற கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருட்தந்தை சொ.ஜோஅருண் சே.ச, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையம், சிறுபான்மையினருக்காக அரசின் சார்பில் செயல்படுத்தப்படுகின்ற சிறப்பு திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வதற்காகவும், அவை முறையாக சிறுபான்மையின மக்களை சென்று அடைகிறதா என்றும், அனைத்துத்தரப்பு சிறுபான்மையின மக்கள் பாதுகாக்கப்படுகிறார்களா என்பது குறித்து ஆய்வு செய்ய திருநெல்வேலி மாவட்டத்தில் இக்குழு வருகைதந்துள்ளது.

இந்த ஆணையத்தில் சிறுபான்மையின மக்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் வழங்கிய கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் நேரடியாக விசாரணை செய்து அறிக்கைகளை இந்த ஆணையம் பெற்று, தீர்வு காணும் வகையில் செயல்பட்டு வருகிறது, தகுதியுடைய கோரிக்கைகள் அனைத்தும் அன்றையதினமே தீர்வு காணப்பட்டு வருகிறது. 

நீண்ட நாட்கள் நிலுவையிலுள்ள கோரிக்கைகளை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நலத் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் சே.ச. தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, சிறுபான்மையினர் நல பிரிவு அமைப்புகளைச் சார்ந்தோர்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று, கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

முன்னதாக, முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலம் தலா ரூ.6 ஆயிரம் மதிப்பில் 46 ஏழை, எளிய கல்லூரி மாணவிகளுக்கு உதவித் தொகையினையும், கிறித்தவ மகளிர் உதவும் சங்கம் மூலம் தலா ரூ.10 ஆயிரம் மதிப்பில் 20 கல்லூரி மாணவிகளுக்கு உதவித் தொகையினையும், 50 பயனாளிகளுக்கு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய அடையாள அட்டைகளுகம், 25 பயனாளிகளுக்கு கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய அடையாள அட்டைகளும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் ரூ.17,71,150/- மதிப்பில் 14 பயனாளிகளுக்கு கடன் உதவித் தொகையினையும், வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் 3 உலமாக்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க ரூ.75 ஆயிரம் மானிய உதவித்தொகைகள் என மொத்தம் 153 பயனாளிகளுக்கு ரூ.23.22 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கிறித்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய தலைவர் விஜிலா சத்தியானந்த் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், திட்ட இயக்குநர்கள் சரவணன் (ஊரக வளர்ச்சி முகமை), இலக்குவன் (மகளிர் திட்டம்), துணை இயக்குநர் சிறுபான்மையினர் நலத்துறை சர்மிலி, மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் ஜா.ராஜசெல்வி உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory